Skip to main content

வேப்ப மரத்தின் யோசனையும்- மாமரத்தின் போராட்டமும்

 

 

வேப்ப மரத்தின் யோசனையும்- மாமரத்தின் போராட்டமும்:
ஒரு அழகான வீடு, அது பழமையான வீடும் கூட.
ஆம் 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது,
அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது,
அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள்.
அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம்,
அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது.
அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
இந்த பாரம்பரிய வீட்டை இடித்து அதே இடத்தில் ஒரு Apartment கட்டி ஆளுக்கொரு flat எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற முடிவோடு
ஒன்றுகூடி இருக்கிறார்கள்,
தாத்தாவும் ஒப்புதல் அளித்துவிட்டார்,
ஆனால் அந்த மரத்தை வெட்டவேண்டாம் என்று எவ்வளவோ போராடிப்பார்த்தார்,
ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை,
வெளியில் இருந்து பார்க்கும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு எடுப்பாக இருக்காது இந்த மரமே மறைத்துவிடும் என்று முதல் வேலையாக மரத்தை வெட்டுவதென முடிவு செய்து, விலைபேச ஆட்களையும் வரச்சொல்லி விட்டார்கள்.
அரசல் புரசலாக விஷயம் தெரிந்துகொண்ட மாமரம் ஒரு நிமிடம் ஆடிப்போனது,
வேறெங்கோ வேலை முடித்துவிட்டு கத்தி கோடாறியுடன் ஆட்கள் van ல் வந்து இறங்கினார்கள்,
தெருவில் இருந்த அத்தனை மரங்களும் ஒருவித பயத்துடனும் பதட்டத்துடனும் ஆடாமல் அசையாமல் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தது,
அவர்கள் தான் இவர்களின் எதிரி.
அவர்கள் தெருவில் வந்தாலே இவர்களுக்கு நடுங்க ஆரம்பித்துவிடும்!
அவர்கள் நேராக மாமரத்து வீட்டிற்கு வந்து நிற்க எல்லா மரங்களுக்கும் புரிந்துவிட்டது !!
மாமரத்து நிழலில் உட்கார்ந்து டீ சாப்பிட்டபடி பேரம் பேசினார்கள்,
விலைபேசி முடித்ததும் எப்படி வெட்டலாம் என்று சுற்றிச்சுற்றி வந்து நோட்டமிட்டார்கள்,
தூரத்தில் இருந்து எல்லா மரங்களும் எட்டி எட்டி பார்க்க என்ன பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை,
ஆனால் மாமரம் மட்டும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தது, கடைசியில் நாளை காலை வந்து வெட்டிவிடுகிறோம் என்று கூறிவிட்டு சென்றார்கள்.
மாமரத்திற்கு துக்கம் தாங்க முடியவில்லை,
60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் தாத்தாவைத்தவிர யாருக்கும் நம்மீது இரக்கமில்லையே என்ன மனிதர்கள் இவர்கள், உணர்ச்சியற்ற ஜடங்களாக இருந்துகொண்டு நம்மை மரம் என்கிறார்களே, உண்மையில் இவர்கள்தான் ஈரமற்ற மரக்கட்டைகள் என்று வேதனைப்பட்டது!
இரவு 8 மணி
எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க தாத்தாவும் மாமரமும் மட்டும் எதையும் சாப்பிடவில்லை,
தாத்தா மனக்கவலையோடு வெளியே வந்து மாமரத்தை தொட்டுப்பார்க்க அவரை கட்டிப்பிடித்து அழமுடியாதபடி மரமாய் பிறந்துவிட்டோமே என்று முதன்முதலாக வேதனைப்பட்டது மாமரம்!
அங்கிருந்த easy chair ல் உட்கார்ந்தபடி கவலைப்பட்டுக்கொண்டே தாத்தா உறங்கிவிட்டார்!!
ஆனால் மாமரத்திற்கு உறக்கம் வரவில்லை,
நாளை காலை கத்தி கோடாறி, ரம்பம் என்று விதவிதமான ஆயுதங்களோடு வருவார்கள், ஒரே அடியாக
கழுத்தை வெட்டிவிட்டால் பரவாயில்லை, ஆனால் இவர்கள் கை, கால், தலை என ஒவ்வொரு உறுப்பாக வெட்டுவார்களே வலியை எப்படி தாங்கிக்கொள்ள போகிறோம்,
நம்மை நம்பி இந்த பறவைகள் வேறு கூடுகட்டி இருக்கிறது
பாவம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் எல்லாம் குஞ்சுபொறித்தது,
சென்ற மாதம் பின்புற வீட்டில் மரம் வெட்டும்போது இப்படித்தான் குஞ்சுகளெல்லாம் கீழே விழுந்து நசுங்கிபோய்விட்டது அதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதை எப்படி தாங்கிக்கொள்ள போகிறேன்!? என்று பயந்துகொண்டே இருந்தது,
நீண்ட நேரமாகியும் எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்த மாமரத்தை பார்த்து பக்கத்து காம்பௌண்டில் இருந்த வேப்பமரத்திற்கு ஏதோ சந்தேகம் வந்து தன் கிளைகளை நீட்டி மாமரத்தோடு பின்னிக்கொண்டு எதாவது பிரச்சனையா என்று கேட்டது? (பொதுவாக மரங்கள், செடிகொடிகள் தங்களது உணர்வுகளை இப்படித்தான் பகிர்ந்துகொள்ளும் )
மாமரம் நடந்த எல்லாவற்றையும் கூற வேப்பமரம் மிகவும் வேதனைக்குள்ளானது, காரணம் இரண்டு மரங்களும் சிறுவயது முதல் ஒன்றாய் வளர்ந்தவை, தங்களுடைய சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டவை நாளை காலை சாகப்போகும் நண்பனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று வேப்பமரம் துடித்தது,
ஆனால் மாமரத்திற்கு தெரியும் தன்னுடைய இறப்பை யாராலும் தடுக்கமுடியாது என்று, அதனால் உன்னுடைய கிளைகள் மூலம் இந்த பறவைக்கூட்டை மட்டும் எப்படியாவது வாங்கிக்கொள் என்று வேப்பமரத்திடம் கேட்டது,
ஆனால் வேப்பமரம் மறுத்துவிட்டது,
உன்னுடைய இறப்பு இயற்கையான முறையில் இருந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியும்
இதுபோன்ற சுயநலம் மிக்க மனிதர்களால் கொல்லப்படுவாய் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்,
கடைசி முயற்சியாக அந்த தாத்தாவின் மனதில் கனவாக நுழைந்து உன்னை கொல்லாமல் தடுக்கும்படி வேண்டுகோள் விடு, அது நிச்சயம் பேரனைப்போய் சேரும் அப்போதாவது அவன் மனம் மாறுகிறதா பார்ப்போம்.. என்றது.
என்னால் எப்படி மனதில் நுழைய முடியும்? என்று மாமரம் கேட்க, உனக்கே என்னைப்பற்றி தெரியும்,
நான் பிறக்கும்போது வெறும் வேப்பமரமாகத்தான் பிறந்தேன், இந்த குடும்பம் என்னை சாமி என்று நினைத்து, மூன்று தலைமுறையாக பூஜை செய்து வருகிறார்கள்,
60 வருடங்களாக மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் செய்த பூஜைகளும் வேண்டுதல்களும் சேர்ந்து எனக்குள் ஒரு சக்தியை உருவாக்கி இருக்கிறது,
அந்த சக்தியை பயன்படுத்தி உன்னை அவர் மனதுக்குள் அனுப்ப என்னால் முடியும், மனதை ஒருநிலைப்படுத்தி உன் வேண்டுதலை கனவாக கூறு... போ !
என்று அனுப்பிவைக்க
மாமரமும் அவ்வாறே செய்ய கண்கலங்கியபடி எழுந்த தாத்தா மெல்ல நடந்து பேரனிடமும் குடும்பத்தினரிடமும் தன்னை கொல்லவேண்டாம் என்று மாமரம் கனவில் வந்து அழுததாக கூற, எல்லோரும் கேலி பேசியபடி தாத்தாவை உள்ளே வந்து படுக்கும்படி கூறிவிட்டு போய்விட்டார்கள்!
மாமரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது, ஆனால் வேப்பமரத்திற்கு கோபம் பெருக்கெடுத்தது,
இது உனக்கும் இந்த குடும்பத்துக்குமான போராட்டம் மட்டும் கிடையாது,
உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நன்றிகெட்ட தனத்தின் உச்சம்!
மனிதர்களுக்கு உதவுவதற்காக படைக்கப்பட்ட மரங்களை மனிதனே தன் சுயநலத்திற்காக அழித்துக்கொண்டு இருக்கிறான்!
அவன் சுயநலத்திற்கு நாம் ஏன் பலியாக வேண்டும், நம்முடைய சக்தி என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்!
என்று வேப்பமரம் ஆவேசப்பட,
நம்மால் என்ன செய்யமுடியும், பேசமுடியாது, நடக்க முடியாது, ஓடமுடியாது, நம் பிரச்சனையை புரியவைக்க முடியாது, பிறகு எப்படி மனிதர்களுக்கு உணர்த்தமுடியும்?!
நிச்சயம் முடியும்,
இந்த நிமிடம் முதல் நம்மைப்போன்ற எல்லா மரங்களும் மனிதர்களுக்கு தருகின்ற ஒத்துழைப்பையும், உதவியையும் நிறுத்தினால் நாளை காலை உன்னையும் உன்னைப்போன்று பாதிக்கப்படுபவர்களையும் சாவிலிருந்து காப்பாற்ற முடியும்,
நான் சொல்வதை மட்டும் செய் என்று வேப்பமரம் மாமரக்கிளைகளோடு பின்னிக்கொண்டு ரகசியமாக எதையோ சொல்லி அதை எல்லா மரங்களுக்கும், கிளைகள் மூலமாகவோ, வேர்கள் மூலமாகவோ சொல்லும்படி கூற, மாமரமும் வேப்பமரமும் தன் கிளைகளும் வேர்களும் எட்டும் தூரத்தில் இருக்கும் எல்லா மரம் செடிகொடிகளுக்கு தகவலை சொல்ல, அவையெல்லாம் தன் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு தகவல்களை சொல்ல, இப்படி நாடுமுழுவதும் கிளைகள் மூலமாகவும் வேர்கள் மூலமாகவும் எல்லா மரம் செடிகொடிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது,
மாமரமும், வேப்பமரமும் பொழுது விடிவதற்காக காத்திருந்தது....
-----------------------------
மெல்ல சூரியன் உதித்தது.
எல்லா இடங்களிலும் சராசரி அளவைவிட புகைமண்டலம் அதிகமாக இருந்தது,
எல்லா மக்களும் வழக்கமான நேரத்தைவிட கொஞ்சம் முன்பே எழுந்து தும்மியபடி வெளியே வந்தார்கள்,
சொல்லிவைத்தது போல் எல்லோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது,
புகைமண்டலம் அதிகமாகிக்கொண்டே போனது, இருமியபடி மரத்தை வெட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கினார்கள்,
இரண்டு மரங்களும் வேதனையோடும் நம்பிக்கையோடும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தன,
அவர்கள் மெல்ல மரத்தில் ஏறி கயிறுகட்ட ஆரம்பித்தார்கள், ..
அதற்குள் மூச்சுத்திணறல் அதிகமாகி மக்களெல்லாம் தெருவிற்கு ஓடிவர ஆரம்பித்தார்கள்,
வேப்பமரம் சொன்ன ரகசியம் இதுதான்.
இந்த நிமிடம் முதல் எல்லா மரங்களும் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்காமல் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கவேண்டும் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிவிட்டு, அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடை நாம் உள்ளே இழுத்துக்கொள்வதால் தான் மனிதர்களால் உயிர்வாழ முடிகிறது,
நாம் ஏன் அவர்களை காப்பாற்ற வேண்டும்?!
எப்போது அவர்கள் நன்றியில்லாமல் நம்மை அழிக்க ஆரம்பித்துவிட்டார்களோ இனிமேல் அவர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் வேண்டாம்,
நாம் ஏன் விஷத்தன்மை கொண்ட கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்க வேண்டும்?!
அவர்களால் உருவாக்கப்பட்டது அவர்களே சுவாசித்துக்கொள்ளட்டும்!!
என்ற வேப்பமரத்தின் கருத்தை எல்லா மரங்களும் ஏற்றுக்கொண்டதன் விளைவே இந்த மூச்சுத்திணறல்!
மரத்தில் ஏறியவன் கயிறு கட்டமுடியால் போராடினான்!
நாடே காரணம் தெரியாமல் போராடிக்கொண்டு இருக்க மரங்களெல்லாம் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், விலங்கினங்களுக்கும் மட்டும் ரகசியமாய் ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டு cool ஆக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன!!
மரத்தில் ஏறியவன் தடுமாறி கீழே விழுந்தான்.
பேரனும் குடும்பத்தினரும் மரத்தின் கீழ் வந்து விழுந்தார்கள்!
குடும்பத்தினர் எல்லோரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க
--------------------------
என்ன மூச்சு முட்டுதா?!
------------------
என்ற குரல் கேட்டு
அங்கும் இங்கும் பார்க்க
நான்தான்டா மாமரம் பேசறேன்....
After all மரந்தானேன்னு கேவலப்படுத்துனீங்க இல்ல,
இப்போ சாவுங்க.....
எங்களோட value என்னன்னு புரியவைக்கிறதுக்குதான் இந்த மரப்போராட்டம்!!
60 வருஷமா
எவ்ளோ நிழல்,
எவ்ளோ காய்,
எவ்ளோ பழம் குடுத்திருப்பேன்
நீங்கல்லாம் குழந்தையா இருக்கும்போது என் கையில தான் ஊஞ்சல் கட்டி ஆடுவீங்க, எல்லாத்தையும் மறந்துட்டீங்க இல்ல?!?
நீங்கல்லாம் நல்லா வாழனும்னு தான் உங்களுக்கு உதவியா கடவுள் எங்களை படைச்சாரு,
காத்து, மழை, காய்கறி, பழம், வீடு, படகு, நடைவண்டி, கைத்தடின்னு செத்து மண்ணா போறவரைக்கும் உங்ககூட தானே இருக்கோம்.
நீங்க மட்டும் ஏன் இப்படி நன்றிகெட்ட தனமா இருக்கீங்க?!
நீங்க ஆரோக்கியமா இருக்கிறதுக்காக முளைகட்டுன பயிருன்னு வாங்கி தின்றீங்க இல்ல, அதெல்லாம் எங்களோட பச்சைகுழந்தைங்க!
உங்க கிட்னி நல்லா இருக்கனுன்றதுக்காக தான் எங்கள வேரோட வெட்டிட்டு வந்து வாழைத்தண்டுன்னு விக்கிறாங்க! அப்போ எவ்ளோ வலிக்கும் தெரியுமா?!
எவ்ளோ ரத்தம் போகும் தெரியுமா?!
சிகப்பா இருந்தாதான் ரத்தமா?
வெள்ளையா இருந்தா ரத்தம் இல்லையா??
கரப்பான் பூச்சி, தேளுக்கு எல்லாம் ரத்தம் வெள்ளையாதான் அதுமாதிரிதான் இதுவும்!
இனிமே எவனாவது கீரை, வாழைத்தண்டுன்னு தின்னுட்டு pure veg ன்னு புளுகுனீங்க வாயிலேயே குத்துவேன்!
உலகத்துல இருக்கிற அத்தனை உயிரினங்களுமே non vegetarian தான்! Mind it!! என மிரட்ட ...
அதெல்லாம் okay இப்ப உனக்கு ஆமான்னு சொல்லனும்னா கூட நான் உயிரோட இருந்தாதான் முடியும், please காப்பாத்து என எல்லோரும் கெஞ்ச,
மரங்கள் யாவும்
மரங்கள் இல்லை, மனிதர்கள் தான் மரக்கட்டைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக
எல்லா மரங்களும் மனிதர்களை மன்னித்துவிட்டு, விஷவாயுவை விழுங்கி ஆக்சிஜனை வெளியேற்ற
மனிதகுலம் மீண்டும் சுவாசிக்க தொடங்கியது ஆனால் கொஞ்சம் நன்றியோடு!!
நம் எல்லோருடைய வீட்டிலும் எதாவது ஒரு மரமோ செடிகொடியோ இருக்கும்,
அவைகளுக்குள் நிச்சயம் ஒரு மனமிருக்கும் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும்.
மர(ண)ப் போராட்டம் வென்றது


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு வெட்

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்