முற்றம் (COURTYARD) நம் முன்னோர்களின் அருமையான வாழ்வியல் சிந்தனைகளில் விளைந்த ஒன்று.
மனித இனம் மற்ற உயிரினங்களைப் போலவே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற பிரபஞ்ச விதியின் அடிப்படையில் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத்தில் ஒரு முக்கியமான கட்டுமானம் தான் முற்றம்.
முற்றம் அமைத்து கட்டுவதால் ஏற்படும் உடல் நலன்கள்…
- தீங்கு விளைவிக்கும் கிருமித் தொற்றுகளை அழிப்பதற்குத் தேவையான இயற்கையான சூரிய வெளிச்சம் போதுமான அளவில் முற்றத்தின் வழியே ஊடுருவும்.
- பரவலான காற்றோட்டம் கிடைக்கிறது.
- சூரியக் குளியல் எடுக்க விரும்புவோர் மாடி வசதி இல்லாத சூழலில் வீட்டு முற்றம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
- வத்தல் வடகம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை காய வைப்பதற்கான ஒரு இடமாக விளங்கியது.
- மழைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு மழை நீரை வீட்டுக்குள் சேகரித்து வெப்பச் சமநிலையை கட்டுக்குள் வைக்க உதவியது.
- பவுர்ணமி முழு நிலவின் ஒளியை அனுபவித்தபடி குடும்பத்தோடு உணவு உண்டு மகிழ்ந்து தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு ஒரு வளமான தலைமுறை வளர இது உதவியது. (ஆனால் இன்று தாத்தா பாட்டியின் உயிரற்ற உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நடுவே உட்கார்ந்து கொண்டு பேரன்களும் பேத்திகளும் அலைபேசியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வீட்டு முற்றத்தால் ஏற்பட்ட உளவியல் நன்மைகள்.
- அவ்வப்பொழுது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக அது விளங்கியது.
- விண்மீன்களும் நிலவையும் பார்த்துக்கொண்டு படுத்தபடியே அவற்றுடன் உரையாடிக் கொண்டிருக்க நமக்கு நேரமும் இருந்தது.
- முற்றத்தில் வந்தமரும் பறவைகளுக்கு தானியங்களை கொடுத்து உயிர் நேயத்தை குழந்தைகளுக்கும் போதித்தனர் நம் முன்னோர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு புதுக் கவிதை.
"என் வீட்டு முற்றத்தில் வந்தமரும் காக்கைக்கு எப்படிச் சொல்வேன் விதை நெல்லும் தீர்ந்து விட்டது என்று"…
Source:
https://qr.ae/pGOgQ9
Comments
Post a Comment