கொட்டும் மழையே கேளாய்
.....கூரை உண்டிங் கெனக்குக்,
கொட்டும் உன்னைக் கண்டு
.....கொண்டா டிடுவேன் நானும்!
பட்ட நோயால் தாயூர்
.....பார்த்துச் சாலை தன்னில்
எட்டி நடக்கும் ஏழை
.....என்ன செய்வார் பாவம்?
பொழியும் மழையே கேளாய்
.....புகவோர் வீடுண் டெனக்குப்,
பொழியும் உன்னைப் பார்த்துப்
.....போற்றிக் களிப்பேன் நானும்!
மொழிமா றிவந்திங் குழைத்தோர்
.....மூட்டை சுமந்து தாயூர்
வழிபார்த் தேகின் றாரே
.....மழைக்கெங் கொதுங்கி நிற்பர்?
தூவும் மழையே கேளாய்
.....தொழிலுண் டைவுண் டெனக்குத்,
தூவும் உன்னை நோக்கித்
.....துள்ளிக் குதிப்பேன் நானும்!
மேவி இருந்த வேலை
.....மேற்கொண் டில்லா தாகி
ஆவித் தாயூர் செல்லும்
.....அவரை எண்ணி நிற்றி!
[நிற்றி - நின்றுவிடு; முன்னிலை ஏவல்!]
Comments
Post a Comment