எழுத்தாளர் சுஜாதா காஞ்சி பெரியவரைப் பற்றி கூறியது...
பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது.
இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை.
கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார்.
ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும் போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப் போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான். திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழ வேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது.
பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அறிய நேர்ந்தபோது, என் நெற்றித் திருமண்ணை ஒரு சார்புக்குறியாக மட்டும் நான் கருதவில்லை. நம் சான்றோர்களின் ஆழமான பேரறிவை எண்ணி வியந்து போனேன்.
‘விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து பஸ்மமாக்குகிறது’ என்கிறான் கண்ணன் கீதையில்…
கண்ணனின் கருத்துப்படி பார்த்தால், ஞானத்தின் தோற்றம்தான் பஸ்மம்; அதாவது விபூதி! இதைச் சுட்டிக்காட்டி தன் கருத்தைக் கூற முன் வரும் பெரியவர், வெகு அழகாக அதற்காக அஸ்திவாரமிடுகிறார்.
‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய் விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது.
ஆக, விபூதி நாம் யார் என்பதையும், நம் முடிவு எப்படிப்பட்டது என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறது’ என்கிறார்.
அப்படியே திருமண்ணுக்கும் விளக்கம் தருகிறார். வைஷ்ணவர்கள் துளசிச் செடியின் அடி மண்ணைத்தான் திருமண் என்று இட்டுக்கொள்வார்கள். அதை உடம்பின் பன்னிரெண்டு இடங்களில் இட்டுக்கொள்வார்கள். அப்படி இட்டுக் கொள்ளும்போது, விஷ்ணுவின் நாமங்களை (பெயரை) _கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர_ என்று சொல்லிச் சொல்லி இட்டுக்கொள்வார்கள்.
இப்படி நாமங்களைச் சொல்லி இட்டுக்கொண்டது தான் பின்னாளில், ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டது’ என்கிறார்.
என்ன ஒரு நேர்த்தியான வியாக்யானம்! பெரியவரின் இந்த கருத்தை தெய்வத்தின் குரல் வாயிலாக அறிந்த பிறகு விபூதி, திருமண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர் சொன்ன ‘சாயம் வெளுத்து விட்டது’ உதாரணமும், நாமம் சொல்லிப் போட்டது ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டதும் நினைவுக்கு வரும்.
(எழுத்தாளர் சுஜாதா மஹாபெரியவரைப் பற்றிக் கூறியது )
Comments
Post a Comment