Skip to main content

இனிமே இப்படித்தான்...






 
 
 
 


இனிமே இப்படித்தான்...

இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன்
 சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள். 

நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா

ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்ச
 கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா..  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு..
.ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.

எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..

நாளைக்கா ?

 என்ன விசேஷம்... ? 

போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...

சொல்லுடி என்ன பிரச்சினை..

ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

சொல்லு என்ன பிரச்சினை...

ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...

சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு 
வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே

ஒன்னும் வேணாம்...

நோ நோ.. இது சக்தி ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு. சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி. 

ஏன் அப்படி...

அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...

செமயா இருக்கு. நீ போட்ட பிளானா

நான் மட்டுமில்லை...  எல்லாரோட உழைப்புமிருக்கு...

அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.

நீ தான் சொல்லனும்

நான் என்ன சொல்ல...

ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்... 

ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா

அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னடா ஏதும் பிரச்சினையா 

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். 

என்ன இது ..

ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.  அவள் படிக்க தொடங்கினாள்

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம்  உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும்  வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க  எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர  அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...  உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...  காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா  அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ? 

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்  ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு  வாழ்க்கையா ?

செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்..... 

.நான் தான்மா
..... 
ஏன் சும்மா பேசக்கூடாதா
... 
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு...  என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம்  கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.




 
 
 
 




 
 
 
 






 
 

 




 
 
 



Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...