சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.
வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!
தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..
அன்று காலை எழுந்தவுடன்
அவருக்கு ஒரு பிரச்னை.
சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.
இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.
டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன
அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.
‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.
‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்
கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என
குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்
வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!
‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!
நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்
இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.
Comments
Post a Comment