கடவுளின் தேடல்.
==============
அக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்து வேளையும் தொழுகை செய்யும் வழக்கம் இருந்ததால் அக்பர் மண்டியிட்டுத் தொழுகையில் ஈடுபட்டார்.
மரம் வெட்டச் சென்று.. வீடு திரும்பாத கணவனைத் தேடிக்கொண்டு அந்த நேரத்தில் அங்கே வந்தாள் காட்டில் வாழ்ந்த பெண்.
தொழுகையில் இருந்த அக்பரைக் கவனிக்காமல் வந்ததால் அவர் மீது இடறி சென்றாள். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவள் சுதாகரித்துச் சென்று விட்டாள்.
மாமன்னனாகிய தன்மீது மோதியதும் அல்லாது மன்னிப்புகூட கேட்காமல் செல்லும் அவளைக் கண்டு அக்பர் மிகவும் கோபம் கொண்டார்.
ஆனால் தொழுகையை இடைநிறுத்த விரும்பாது தொடர்ந்தார். அந்தப்பெண் கணவனுடன் திரும்பி வந்த போது அக்பர் தன் தொழுகையை முடித்திருந்தார்.
அவர்களை கோபமாக நிறுத்தினார்.
"இந்த நாட்டின் மன்னன் என்று தெரியுமா..?தொழகையில் இருந்த என்னை இடறிவிட்டு மன்னிப்புகூடக் கேட்காமல் போகிறாயே..! என்ன திமிர்..? என்று கேட்டார் அக்பர்.
அதற்கு அந்த பெண் சற்றும் தயங்காமல்.. "என் கணவனை த் தேடிச் சென்றபோது மன்னனையே நான் காணவில்லை..! ஆனால் கடவுளை எண்ணித் தொழுகையில் இருந்த உங்களால் சாதாரண மரவெட்டியின் மனைவியை எப்படிக் கவனிக்க முடிந்தது..?" என கேட்டாள். பதில் ஏதும் இன்றி தலைகுனிந்தார் அக்பர்.
(எல்லோருமே வணங்கிறார்கள் என்று நாமும் அதையே வெறும் சடங்குகளாக செய்யும் போது அதன் நோக்கம் எதுவும் இல்லாது இப்படித்தான் பாழாய் போகும்.)
Comments
Post a Comment