Skip to main content

மதுரை குஞ்சரத்தம்மாள்

ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாதுவருடப்பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.
குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-
இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர். அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.
தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.
பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு
எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.
கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.
அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.
ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய்.
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.
நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.
மாமதுரை மக்கள்.
தகவலுக்கு நன்றி டாக்டர் சுபாஷினி ..
 Sivakumar Kotteri Deivasigamani/ FB/30/04/2020

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...