Skip to main content

அன்று முதல் பறவைகள் பழங்களை உண்ட







செண்பகக் காட்டில் ஏராளமான பறவைகள் இருந்தன. அவரவர் வேலைகளைக் கவனமாகச் செய்து வந்தன. சூரியன் உதிப்பதற்கு முன்பே, அதிகாலையில் இரைத் தேடப் புறப்படும் பறவைகள், மாலை வேளைதான் தங்களின் கூடுகளுக்கே திரும்பும்.
புங்கை மரத்தில் குருவி ஒன்று கூடுகட்டி வாழ்ந்துவந்தது. அது இரண்டு முட்டைகளை இட்டது. குஞ்சுகளுக்காக இலைகளை மெத்தைப்போல அலங்காரம் செய்து வைத்திருந்தது.
சில நாட்களில் முட்டைகளிலிருந்து குருவிக் குஞ்சுகள் வெளியே வந்தன. அதைப் பார்த்ததும் தாய்க் குருவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இரண்டு குருவிக் குஞ்சுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, துறுதுறுவென்று இருந்தன. ’க்ரிக்... க்ரிக்…’ என்று சத்தம் போட்டுத் தாயை அழைத்தன.
தாய்க் குருவி குஞ்சுகளுக்குப் பசி என்று புரிந்துகொண்டது. உடனே தயாராக வைத்திருந்த சிறியப் புழுக்களை உணவாகக் கொடுத்தது.
சில வாரங்கள் சென்ற பிறகு, குஞ்சுகளுக்கு இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. அவை பறப்பதற்கு முயற்சி செய்தபடியே இருந்தன.
குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போன தாய்க் குருவிக்கு ஒரு சப்போட்டா பழம் கிடைத்தது. அது மிகவும் இனிப்பான, சுவையான பழம். அதைத் தாய்க் குருவி, தன் குஞ்சுகளுக்காகக் கொண்டுவந்தது.
“பசங்களா! இது இனிப்பான சப்போட்டா பழம். இதைச் சாப்பிடுவதற்கு முன்னாடி குளிச்சிட்டு வாங்க. நான் இலை கொண்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றது தாய்க் குருவி.
இரண்டு குஞ்சுகளில் ஒன்று தாய் சொல்லைத் தட்டாமல் உடனே குளிக்க ஆற்றுக்குப் பறந்தது.
இன்னொரு குருவிக்கு, அந்தச் சப்போட்டாவை உடனே சுவைக்க ஆசை வந்தது. முதலில் கொஞ்சமாக ருசித்துப் பார்த்தது. பழத்தின் சுவை குருவிக் குஞ்சுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘அம்மாவும் தம்பியும் வருவதற்குள் மீதியையும் தின்றுவிடலாம்’ என்று எண்ணி, முழுப் பழத்தையும் அப்படியே விழுங்கியது.
சற்று நேரத்தில் தம்பிக் குருவி வந்தது. அது வந்த சிறிது நேரத்தில் தாய்க் குருவியும் வந்தது.
இலையை விரித்து வைத்தது. சப்போட்டா பழத்தை எடுக்கச் சென்றது. வைத்த இடத்தில் பழம் இல்லை. திடுக்கிட்ட குருவி. தன் குஞ்சுகளைப் பார்த்து, “யார் பழத்தைத் தின்றது?” என்று கேட்டது.
இருவருமே “நான் இல்லை” என்றனர்.
“உங்கள் இருவரில் யார் தின்றீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உண்டிருந்தால் அதன் விதைகள் இந்தக் கூட்டில்தான் விழுந்திருக்கும். ஆனால் கூட்டில் விதைகள் இல்லை. ஆக யாரோ ஒருவர் முழுப் பழத்தையும் விழுங்கிவிட்டீர்கள். அது வயிற்றுக்குள் சென்ற 24 மணிநேரத்தில் செடியாக முளைக்கத் தொடங்கிவிடும்” என்று அச்சுறுத்தியது தாய்.
குஞ்சுகள் இரண்டும் அம்மாவைப் பார்த்தபடியே இருந்தன.
“உங்கள் வயிற்றில் வளர்ந்த செடி, அடுத்த ஆறு வாரத்தில் மரமாகும். அந்த மரம் வளர்வதற்கு வயிற்றில் இடமிருக்காது. அதனால் வயிறு லேசாக விரிசல் விடும். அப்புறம்...” என்று தாய்க் குருவி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டது ஒரு குருவிக் குஞ்சு.
“அம்மா! என்னை மன்னிச்சுடுங்க. நான்தான் அந்தப் பழத்தை அப்படியே முழுங்கிவிட்டேன். இனி இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன். என் வயிற்றில் செடி முளைக்காமல் இருக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று பயந்து அழுதது அந்தக் குருவிக் குஞ்சு.
“நீதானா! சரி... சரி.. அழாதே” என்று ஆறுதல் சொன்னது தாய்க் குருவி.
“ஐயையோ அண்ணன் மரத்தை முழுங்கிட்டான்” என்று அழுதது மற்றொரு குருவிக் குஞ்சு.
“மகனே! பயம் வேண்டாம். விதைகள் மண்ணில் புதைந்தால்தான் செடிகளாகும். அந்தச் செடிகள்தான் மரங்களாகும். பழத்தைத் தின்றது யார் என்பதைக் கண்டறியவே அப்படிச் சொன்னேன்” என்றது தாய்க் குருவி.
குருவிக் குஞ்சுகள் நிம்மதியடைந்தன.
அன்று முதல் பறவைகள் பழங்களை உண்ட பிறகு, விதைகளைப் பூமியில் எச்சங்களாக விடுகின்றன. அவற்றிலிருந்து தாவரங்கள் முளைக்கின்றன!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...