Skip to main content

தகப்பன் சாமி

செஞ்சிக்கு போகும் வழியில்,
மதிய உணவுக்காக காரை நிறுத்தியபோது தான், அவரை கண்டேன், அந்த பெரியவருக்கு அறுபது வயதிருக்கும்...
கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும்,
வாயில் விசிலுமாய்,
ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,
நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ,
கால் வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...
உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன்,
அவர் இடம் மாறவேயில்லை.
நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும்,
அவர் அமரவே இல்லை.
இது போன்ற எளிய மனிதர்களை கண்டால்,
இயன்றதை தருவது, என் வழக்கம்.
அருகே சென்று,
தோள் தொட்டு திருப்பி, மதிப்புள்ள ஒற்றை தாளாய் பண நோட்டு நீட்டினேன், பணத்தை கவனித்தவர், மெல்ல புன்னகைத்து,
" வேணாம் சார் " என மறுத்தார்.
அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
ஏனெனில்,
நான் கொடுத்த பணத்தின்மதிப்பு அப்படி.
எப்படியும் அது, அவரது ஒருநாள் சம்பள மதிப்பிருக்கும்.
''ஏன் " என கேட்டேன்.
"அவங்க கொடுத்திட்டாங்க "
" யாரு "
திரும்பி,
கார் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.
நிச்சயமாய் நான் கொடுத்ததை போல,
அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.
பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும்,
உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும்,
எனக்கு பிடித்திருந்தது...
மெல்ல பேச்சு கொடுத்தேன்.
" பேரென்னங்க ஐயா "
"முருகேசனுங்க "
" ஊருல என்ன வேல "
" விவசாயமுங்க "
" எத்தன வருசமா இந்த வேல செய்றீங்க "
" நாலு வருசமா செய்றேங்க "
" ஏன் விவசாயத்த விட்டீங்க "
மெல்ல மௌனமானார்.
தொண்டை அடைத்த துக்கத்தை,
மெல்ல முழுங்கினார்.
கம்மிய குரலோடு பேச துவங்கினார்.
ஆனால்
என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,
அவரின் முழுகவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே இருந்தது.
" எனக்கு தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க,
ஒரு பொண்ணு, ஒரு பையன், விவசாயந்தான் பொழப்பே நமக்கு.
ஆனா,
மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே, கடவுள் கண்ணே தொறக்கல.
இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு,
மிச்சமீதிய வச்சு, பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணேன்.
பையன் இருக்கானே,
அவன படிக்க வைக்கணுமே, அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன்.
மூணு வேளை சாப்பாடு. தங்க இடம்,
மாசம் 7500/- ரூபா சம்பளம்.
இந்த வேலைய பாத்துகிட்டே,
பையன என்ஜினியருக்கு படிக்க வைச்சேன்.
படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான்,
பையன் கோயம்புத்துருல வேலைக்கு சேர்ந்தான்.''
" அப்படியா, உங்க பையன் என்ஜினியரா, சூப்பர்.
சரி,அதான் பையன் வேலைக்கு போறான்ல,
நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே "
" போவேன் சார், பையனே "நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்ன்னு" தான் சொல்லுறான்,
ஆனா கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "
" எப்போ"
" இன்னும் இரண்டு மாசம் ஆவும் சார்"
" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, நல்லதே இனி நடக்கும் ".
பெரியவர் சிரித்தார்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஹோட்டலிலிருந்து யாரோ ஒரு பையன் வந்து, அவரிடம் ஏதோ சொன்னான்,
பெரியவர் முகம் மலர்ந்தார். " கொஞ்ச நேரம் உக்கார சொல்லிருக்காங்க" என்றார்.
"என்ன சொன்னீங்க சார். கடவுளா,
கடவுள் என்ன சார் கடவுளு,
அவன் கொடுமை காரனுங்க சார்.
இல்லன்னா,
ஊருக்கே சோறு போட்ட என்னிய, கடனாளியாக்கி
இப்பிடி ரோட்டுல நின்னு,
சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா,
"மனுஷங்க தான் ஸார் கடவுள்,
முகம் தெரியாத, என்னை நம்பி வேலை தந்து, வேலைகாரன் தானேன்னு பாக்காம,
இதோ, வயசானவனுக்கு கால்வலிக்கும்ன்னு உக்காற சொல்ற
என் முதலாளி ஒரு கடவுள்,
"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டபடனும்,
பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, கூழோ, கஞ்சோ பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன,
எம் பொண்ண சந்தோசமா வச்சிருக்கிற,
என் மாப்பிள்ள ஒரு கடவுள்.
கஷ்டப்பட்டு அப்பா படிக்க வச்சத மறக்காம,
" நீ வேலைக்கு போவாதப்பா, எல்லா நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன என் புள்ள,
ஒரு கடவுள்,
நான் கடன அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத எனக்கு கடன் கொடுத்தவங்க ஒரு கடவுள்.
அப்பப்ப ஆதரவா பேசுற,
உங்களைமாதிரி இங்க வர்ற, ஆளுங்க எல்லாரும் தான் சார் கடவுள்.
மனுசங்க தான் சார் கடவுள் "
எனக்கு அந்த பெரியவரை அணைக்க தோன்றியது,
அணைத்துக் கொண்டேன்.
வேண்டாமென மறுத்தபோதும், பாக்கெட்டில் பலவந்தமாய் பணம் திணித்தேன்.
கார் எடுத்து கிளம்பும் போது,
மெல்ல புன்னகைத்த, முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,
தலை வணங்கி, கும்பிட்டேன்.
ஊரெல்லாம் இது போன்ற தகப்பன் சாமிகள்,
நிறைய இருக்கிறார்கள்.
நமக்குத்தான் கும்பிட தோன்றுவதில்லை,
அல்லது நேரமில்லை...
FB/25/11/17   Pasumai Siva

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...