Skip to main content

விமு' யாரை விட்டது--- பாக்கியம் ராமசாமி

*'விமு' யாரை விட்டது?*

-பாக்கியம் ராமசாமி.

எதிர் ஃபிளாட் விமு கதறக் கதற அழுதுகொண்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனது பெற்றோர் ஸ்கூட்டரில் அவனை ஸாண்ட்விச் செய்து கொண்டு கிளம்பினர்.

'அவனுக்கு ஒன்னரை வயசாகிறது. ஒண்ணுமே தெரியலை' என்று விமுவின் அம்மா என் மனைவியிடம் அங்கலாய்ப்பட்டாள்.

பாவம், ஒண்ணரை வயசுக் குழந்தை என்னத்தென் கண்டது என்று ஒரு தினம் என் மனைவி கேட்டு விட்டாள்.

அதற்கு அந்த இளம் தாயார் சொன்னாள். "மற்ற ஒண்ணரை வயசுகளுக்கெல்லாம் தெரியறதே மாமி. என்னமாக ஒவ்வொண்ணு பெயிண்ட் செய்யறது, பாட்டுப் பாடறது, ஹாண்ட் வொர்க் செய்யறது, தானே எடுத்துச் சாப்பிடறது, போய்ப் பாருங்கோ."

குழந்தை விமுவை ஒண்ணாம் வயசு முடிந்ததுமே ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்.

அந்த ப்ளே ஸ்கூலில் இடம் கிடைப்பது என்பது ரொம்ப ரொம்பக் கஷ்டமாம்.

எப்படியோ விமுவின் அப்பா யார் யாரையோ சிபாரிசு பிடித்து இடம் வாங்கி விட்டார்.

.......எதிர் வீட்டு விமு கதறக் கதற அழுது கொண்டே கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனுக்கு வயசு ஒன்றரைதான்.

ஆனால் அவன் பெற்றோர் அதற்குள் அவனை கம்ப்பூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டனர்.

கம்ப்யூட்டர் யந்திரங்களில் பெயர்களைக் கற்றுக் தருவதும்.. மேற்படி யந்திரங்களைத் தொட்டுப் பார்க்கவும் குழந்தைகளுக்குப் பயிற்சி தருகிற பள்ளியாம்.

பலத்த சிபாரிசின் பேரில் அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. விமுவுக்கு வாரத்தில் மூன்று வகுப்பு.

விமுவுக்கு 'க' எழுத்து உச்சரிக்க வராது. 'விமுக்குட்டி எங்கே போய் வந்தது' என்று விசாரித்தால் 'சம்பூசர் க்ளாஸ்' என்பான்.

"விமுக் கண்ணு! ஸ்கொயர் எது காட்டு" என்றாள் தாயார். ஜன்னலின் சதுர டிஸைனைக் குழந்தை காட்டினான். "ட்ரை ஆங்கிள்" எது? என்றாள் தாய்.

ஒரு வட்ட டிஸைனை குழந்தை தப்பாகக் காட்டியது. அது "ட்ரை ஆங்கிள்டா கண்ணு" என்றாள் தாயார்.

குழந்தை ஜன்னல் கதவைப் படபடவென்று ஆட்டினான்.

"விளையாட்டுப் புத்தி வந்துட்டுது. அவ்வளவுதான்!" என்று அம்மாக்காரி தலையில் அடித்துக் கொண்டாள் எரிச்சலுடன். "இப்படி இருந்தால் எப்படிடா விமு?"

"மூடு சரியில்லை போலிருக்கு..." என்று என் மனைவி நழுவிக் கொண்டு வந்துவிட்டாள்.

மணி எட்டே கால். எதிர் வீட்டுப் பெண்மணியின் அலறல்.

"ஊம்... சாப்பிடு! சாப்பிடு! நீயே சாப்பிடணும்... ஸ்பூனை எப்படிப் புடிக்கறது? நல்லா புடிடா... ஏன் இறைக்கிறே? சொல்லிட்டே இருக்கேன். துப்பாதடா... கடன்காரா... உங்களைத்தானே... இங்கே வந்து பாருங்க... என் பிராணனை எடுக்கறான்."

குழந்தையை இடுப்பிலே எடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டு தாயார் சாதம் ஊட்டும் காட்சிகளெல்லாம்.. பொய்யாய்ப் பழங்கதையாகி விட்டன.

பூச்சாண்டி காட்டலாம்னா அதற்கும் பஞ்சம். அத்தைக்கு ஒரு வாய். பாட்டிக்கு ஒரு வாய் எல்லாம் சொல்லி தெரியறதில்லை. நேரம் கிடையாது. ஒரு வயசுக்குள் குழந்தையே ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் சந்தோஷம். ஒண்ணரை வயசாகியும் விமுவுக்கு அந்த வழக்கம் வரவில்லையென்பதால் பெற்றோருக்குக் கவலை.

இரண்டு நாள் கழித்து விமுவை பகல் பதினொரு மணிக்கு அண்ணா நகர் கூட்டிப் போனாள் தாய்.

அங்கே 'லிட்டில் மெளத்' என்று ஒரு பிரத்தியேகப் பள்ளியாம். ஒரு வயது பூர்த்தியான குழந்தைகள், தாங்களாகவே ஸ்பூனினால் அழகாக எடுத்துச் சாப்பிடக் கற்றுத் தரும் பள்ளியாம். அதுக்கு ஒரு பிரின்ஸி. நாலு இன்ஸ்ட்ரக்டர்கள். இரண்டு ஆயாக்கள். இரண்டு பியூன்கள். ஒரு டயடீஷியன். ஒரு குக். இரண்டு வாட்ச்மேன். கார் பார்க்கிங் இடம். இப்படியாக ஒரு நிறுவனம். மாசக் கட்டணம். 2000 ரூபாய்.

குழந்தை, ஏப்ரன் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தது. அம்மாவுக்கு மகா பெருமை.

'அம்மா! நானே சாப்பிட்டுட்டேன்' என்றது.

ஆப்ரனை மட்டும் கட்டிக்கொண்டு பின் பக்க நிர்வாண கோலத்துடன் எல்லா பிளாட்டுக்கும் போய் விமு 'ஆப்பேன் சட்டிண்டு' என்று ஒரு சுற்று போய் வந்தான்.

காலையில் கம்ப்யூட்டர் கிளாஸ், அப்புறம் பிளே ஸ்கூல், அப்புறம் லிட்டில் மெளத்.

விமுவின் பிளே ஸ்கூலிலிருந்து குழந்தையின் டைரியில் வகுப்பு ஆசிரியை அவ்வப்பொழுது ஸ்ரீராமஜெயம் வரிசையாக எழுதுவதுபோல இரண்டு மூன்று வரிகள் எழுதி அனுப்பியிருந்தாள்.

விரல்களால் இறுகப் பற்றிக் கொள்வதில் குழந்தை வீக்காக இருக்கிறான். கவனிப்பது நல்லது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமுவின் அம்மாவும் அப்பாவும் அன்று ராத்திரி தூங்கவில்லை. மறுநாள் ஸ்கூலுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மிஸ்ஸிடம் விசாரித்தார்கள். 'விளையாட்டுச் சாமான்களைக் கீழே இறைத்து விட்டுக் கூடையில் எடுத்துப் போடுகிற சமயம் அடிக்கடி பொருள்களை கீழே போட்டு விடுகிறான்' என்பதாக அவள் சொன்னாள்.

சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் உடனே போனார்கள்.

அவர் பல சோதனை செய்து விட்டு "குழந்தை ஆல்ரைட்! விரல்களுக்குச் சிறிது பயிற்சி தருவது நல்லது" என்றார்.

"சப்பாத்தி சாப்பிடுவீர்களில்லையா. சப்பாத்திக்கு மாவு பிசைவீங்களில்லையா? குழந்தைகிட்டே கொஞ்சம் கொடுத்து நல்லா பிசையச் சொல்லுங்க."

சப்பாத்தி மாவைக் குழந்தை விரலில் ஈஷிப் கொண்டது. 'பிசை... பிசை!' என்று தாயாரும் தகப்பனாரும் குழந்தையைப் பிசைந்தார்கள்.

அவன் நடுநடுவே வாயில் மாவைப் போட்டுக் கொண்டு சிரித்தான். 'உருட்டுடா! அழுத்துடா... ஊம்... ஊம்... அப்படித்தான்... அப்படித்தான்...' என்று அவனை ஊக்குவிப்பதும் உருட்டி மிரட்டுவதுமாக ஒரு வாரம் வீட்டிலேயே சப்பாத்தி பிசையும் பயிற்சி தரப்பட்டது. பிசையும்போது அடிக்கடி சப்பாத்தி மாவைச் சாப்பிட்டதால் குழந்தைக்கு நாலு நாள் வயிற்றுப் போக்கே வந்து விட்டது.

ஆகவே பிளாஸ்டிக்கில் இதற்கென்று ஒரு வகை மாவு விற்கிறது. அது 300 ரூபாயோ 400 ரூபாயோ அதை வாங்கிச் பிசையச் சொன்னார்கள்.

அந்த மாவைத் தின்றால் இன்னும் வியாதி வந்து விடுமே என்று கன்றுக் குட்டிக்கு பால் குடிக்காமலிருக்க வாயில் புட்டுக் கூடை கவிழ்ப்பார்களே அது மாதிரி பயலுக்கு வாயில் ஒரு துணியைக் கட்டி வைத்தார்கள்.

சாயந்திர நேர ஜைனர்கள் மாதிரி பையன் அந்த வாய்க் கட்டுடன் ஜாலியாக இருந்தான். நடுநடுவே தண்ணி என்று உபத்திரம் செய்தால் கட்டை அவிழ்த்து விட வேண்டும்... குடித்ததும் மறுபடி கட்டி விட வேண்டும்.

ஒரு வாரம் மாவு பிசைந்தும் பெற்றோருக்குத் திருப்தியில்லை.

வீட்டில் பயிற்சி தருவதை விடக் குழந்தைகளுக்குச் சிறுசிறு பயிற்சி தரும் 'சர்வீஸ் ஓரியண்டட் கிளப் ஃபர் சில்ட்ரன்' என்று ஓர் அமைப்பு இருக்கிறதே, அங்கே சிறு குழந்தைகளுக்கு (இரண்டு வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு) எல்லா வேலைகளும் கற்றுத் தருகிறார்களாம் என்று கேள்விப்பட்டு 'எஸ்.ஓ.சி.சி'யில் பயலை மறுதினமே சேர்த்து விட்டார்கள். அது மதியம் மூன்றிலிருந்து நாலுவரை. கீழ்ப்பாக்கத்தில் அந்த கிளப் இருந்தது.

அங்கே ஓரொரு குழந்தைக்கும் ஒரு ஆயா தனிக் கவனம் செலுத்தி, குழந்தைக்குப் பயிற்சி தந்து வந்தார்கள்.

வீட்டுக்கு விருந்தாளி வந்தால் நீர் டம்ளரை எப்படித் தட்டில் வைத்து நீர் சிந்தாமல் கொண்டு வந்து தருவது, கீழே நீர் சிந்தினால் துணி கொண்டு வந்து தாங்களே துடைப்பது எப்படி? கீழே கிடக்கும் பேப்பர், புஸ்தகம் முதலியவற்றைக் குனிந்து எடுத்து எப்படி அலமாரியில் வைப்பது, கதவைத் தட்டி விட்டு எப்படி உள்ளே செல்லுவது... முதலியவைகளைக் கற்றுத் தந்தார்கள்.

அவனுடைய அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். விமு வீட்டுக்கு வந்ததும், "மம்மி! நீர்" என்பான். ஒரு டம்ளர் நீர் அம்மா கொண்டு வந்து ஆசையோடு தருவாள்.

குழந்தை உடனே துணியை எடுத்து வந்து தானே துடைப்பான். முற்றிலும் ஈரம் போகாதென்றாலும், குழந்தை தானாகத் துணியால் தரையை 'மாப்' பண்ணுகிறான் வந்து பாருங்கோ" என்று எங்களை அழைத்துச் சென்று காட்டினாள்.

நவராத்திரி கொலுவுக்கு அழைப்பது போல் எல்லா ஃபிளாட்டுக்கும் சென்று குடித்தனக்காரர்களை அழைத்து *'மாப்'பிள்ளையின்* சாமர்த்தியத்தை உலகுக்குப் பரப்பினாள்.

அப்படி வந்த நாலாம் நம்பர் வீட்டு அம்மாள் குழந்தையிடம், "ஏண்டா கண்ணு, உனக்கு ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் தெரியுமோ? எங்கே பாட்டிக்கு சொல்லிக் காட்டு," என்று பகலில் ஸ்டாரைக் காட்டச் சொன்னாள்.

"அவனுக்கு அதெல்லாம் சொல்லித் தரலை. மாண்டிஸோரி மெதாப் ஸ்கூலாக்கும், இவனது..." என்றாள் தாயார்.

அந்த மாமி, "எந்த ஸோரியோ நான் என்னத்தைக் கண்டேன். எங்க வீட்டுப் பிசாசுக்கு ஒரு வயசுகூட இன்னும் ஆகலே, அது அவ்வளவு ட்விங்கிள் ட்விங்கிள்... ஜாக் அண்ட் ஜில் வெண்ட் அப் த ஸில்... ரெயில் ரெயில் கோ அவே... எல்லாம் சொல்றது" என்றாள்.

விமுவின் அம்மாவும், அப்பாவும் யோசித்தனர்.

அந்த மாமி சொன்னதும் கரெக்ட் என்றாள் தாயார். "இந்த வயசிலே நர்ஸரி ரைம் கத்துக் குடுக்காம எப்போ கத்துத் தரப் போறாங்க தெரியலியே."

"ஏபிஸிடியே தெரியாது நம்ம பையனுக்கு. எனக்கும் கவலையாயிருக்கு. வேற ஸ்கூல் மாத்திடுவோமா!"

"நீங்க கொஞ்சம் பேசாமல் இருங்கள். இவுங்க மெதாட் அஃப் டீச்சிங்கே வேற. குழந்தை மூளையிலே எதையும் திணிக்க மாட்டாங்க. அதனுடைய அறிவை லிமிட் பண்ணக் கூடாது என்றது இவங்க பாடத் திட்டம்."

"அது சரி, வயது ஒண்ணரையாறது. ஏபிஸிடி தெரியலேன்னா எப்படி?"

"நாமதான் சொல்லித்தரணும்."

"நம்மகிட்டயெல்லாம் வணங்கி உட்காராது. நமக்கும் ஏது நேரம்? என் பிரண்டு சாந்தினியை விசாரிச்சேன். அவள் பையனுக்கு ஒரு வயசுதான் ஆகிறது. *'ரைம்ஸ் மந்திர்'* னு சாந்தோம்லே ஒரு ஸ்கூல் இருக்காம். ஆறே மாசத்துல குழந்தைகளுக்கு சகல ரைம்ஸும் கத்துக் குடுத்துடறாங்களாம்."

மறுதினம் விமு வீட்டுக்கு வர சாயந்தரம் ஏழுரையாகி விட்டது. மாலை ஆறிலிருந்து ஏழுவரை ரைம்ஸ் வகுப்பு.

இதனடுவே பள்ளியின் ஆண்டு விழாவில் விமு கத்தரிக் காயா நடிக்கவேண்டும் என்று பிரின்ஸி எழுதி அனுப்பி, அதற்கான டிரெஸ் தைக்க 2000 ரூபாய் உடன் அனுப்பச் சொல்லியிருந்தாள்.

வெஜிடபிள் டான்ஸ் என்று ஒரு நடன நாடக நிகழ்ச்சி. குழந்தைகளெல்லாம் மாட்டுச் சந்தைக்கு வந்த கன்னுக் குட்டிகள் மாதிரி மிரள மிரள முழித்துக்கொண்டு நிற்கிற ஒரு நிகழ்ச்சி.

ரூபாய் பெரிசில்லை. குழந்தை கத்தரிக்காயாக எப்படி நடிப்பான் என்று கவலைப்பட்டார்கள் பெற்றோர்.

"கவலைப்பட வேண்டாம். அவனை வீட்டில் தினமும் நன்றாகக் குதிக்கச் சொல்லுங்கள். அது போதும்" என்று சொல்லி அனுப்பினாள் மிஸ்.

வீட்டிலே விமுவைக் குதிக்கச் சொன்னால் 'சுதிக்க மாத்தேன்' என்று பிடிவாதம் பிடித்தான். 'சத்திச்சா நாணாம்' என்கிறான் கத்திரிக்காய் வேணாம்.

"குதிடா குதிடா... குதிடா..." என்று பெற்றோர்தான் தினமும் குதித்தார்கள்.

"இவனையொத்த குழந்தைகள் இந்த வயசில் டான்ஸே ஆடுகிறது," என்றான் கணவன்.

மறுநாள் காலையில் அவசரமாக விமுவின் அம்மா என் மனைவியைத் தேடி வந்தாள். "மாமி உங்களுக்கு யாராவது டான்ஸ் மாமி தெரியுமா, க்ரேஷ் ப்ரோக்ராம் மாதிரி கிரேஷ் டியூஷன் எடுக்க வேண்டும். பத்தே நாளில் விமுவுக்கு நன்றாகக் குதிக்கக் கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கே வந்து சொல்லித் தரணும். எவ்வளவு தொகை கேட்டாலும் தரத் தயார்."

"மேலே கூடுதல் தொகை நாளும் சரி..." என்றான் கணவன்.

என் மனைவி ஒரு காலத்தில் டான்ஸ் கத்துக் கொண்டவள். அடை செய்யும் போது சில அடவுகளும் செய்து காட்டுவதுண்டு.

அவளுடைய அந்தக் கால குரு இந்தக் காலத்தில் நடனபீட அவார்டுக்குரிய முதுமை எய்தி ஏதோ ஒரு சந்து வீட்டில் இருந்தாள்.

அவளை மெதுவாக வரவழைத்து எதிர் வீட்டில் குழந்தை விமுவுக்கு ஸ்கூல் டிராமாவில் குதிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார்கள்.

விமு 'சின்னச் சின்ன சத்தரிச்சா' என்று முதல் இரண்டு நாள் பாடியவாறு குதித்தான். அப்புறம் 'நீ பாடாதே' என்று மரியாதை இல்லாமல் குருவை நிந்திக்கத் தொடங்கினான். கிள்ளிக் கூட கிள்ளினான் என்று அரசல் புரசலாகச் செய்தி. 'தடால்' என்று பின்னால் ஓடி வந்து ஆடு முட்டுவது போல் தள்ளி விட்டதாகவும், குருவம்மா பயந்து ஓடிவிட்டதாகவும் தெரிந்தது.

"எதுக்கு இந்தப் பொல்லாத்தனம். வயசு குட்டிச் சுவருக்கு ஆற மாதிரி ஒண்ணரை ஆறது. குதிக்கத் தெரியறதா.." என்று துக்கித்தாள் தாய்.

இதனடுவே பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தை அழைத்து வரப்போன சமயம் காலை நொண்டிக் கொண்டு வந்தான்.

"என்னடா ராஜா!" என்று துடித்துப் போனாள். அவனைக் கவனிக்கும் மிஸ்ஸிடம் பதட்டத்துடன் விசாரித்தாள். 'அபு' என்ற பையன் (வயது 2) கொஞ்சம் முரடாம். கராத்தே கிளாஸில் சேர்ந்திருக்கிறானாம். எல்லாரையும் எட்டி எட்டி உதைக்கிறானாம். அவனுடைய பேரண்ட்ஸ் யூரோப் டூரிலிருந்து வந்ததும் அழைத்துச் சொல்வதாக இருக்கிறார்களாம்.

தம்பதிகள் தீர்மானித்தனர். "குழந்தையின் பாதுகாப்புக்கு கராத்தே மிகமிக இன்றியமையாதது" என்று தீர்மானித்து எழும்பூரில் ஒரு தனியார் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டனர்.

ப்ளே ஸ்கூலிலிருந்து பதினொரு மணிக்கு வந்ததும் பப்பு மம்மு சாப்பிட்டு விட்டு அழகான கராத்தே டிரெஸ் போட்டுக் கொண்டு கராத்தே ஸ்கூலுக்குப் புறப்பட்டாகிடும். ஆட்டோவில் தாயார் கூட்டிப் போவாள்.

*"இத்தனை ஸ்கூல், இத்தனை படிப்புப் போட்டுச் சுமத்தினால் அந்தக் குழந்தை தாங்குமா?"* என்று ஊரிலிருந்து வந்த பாட்டி சண்டை பிடித்தாள்.

அவன் இன்னும் பஸில்ஸ் போடலை. பெயிண்ட்டிங் கிடையாது. அவனுடைய ஃப்பூச்சரை நினைச்சாத்தான் பயம்மா இருக்கு..." என்றாள்.

பக்கத்திலிருந்த விமுவுக்கு அந்த 'பயம்மா இருக்கு' வார்த்தை ரொம்பப் பிடித்து விட்டது.

"பயம்மா... பயம்மா" என்று சொல்லி எல்லாருக்கும் பூச்சாண்டி காட்டினான்.

விமு பள்ளியில் பரீட்சை என்று ஒன்று கிடையாது. ஆனால் பள்ளி ஆசிரியை அடிக்கடி குழந்தையின் டைரியில் ஏதாவது எழுதி அனுப்பி விடுவாள்.

'குழந்தைக்கு அவசியம் இரவில் பெற்றோர் படுக்கை நேரக் கதைகள் படித்துக் காட்ட வேண்டும். விமு விஷயத்தில் அதைக் கவனிக்கவும்... அவனுக்குக் கதை கேட்பதில் நாட்டம் குறைவாக இருக்கிறது?' என்று எழுதிவிட்டாள்.

அந்தத் தினத்திலிருந்து ராத்திரி எட்டரைக்கு ஒரு பயங்கரப் பிரளயம் எதிர் வீட்டில்.

"குரங்கே! முண்டமே! ஏண்டா தூங்கி வழியறே! கேட்கறியா கேட்கறியா? காதுலே விழறதா... லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் எங்கேடா போனா? ஃபாரெஸ்டுக்கு..." கேள்வியும் அம்மாவே, பதிலும் அம்மாவே.

"அங்கே யார் இருக்கா... அவனோட கிராண்ட் மதர் இருக்கா... கிராண்ட் மதர்னா யாரு?"

"நீ!" குழந்தையின் பதில். இப்படியாக அரைமணி நேரம் ரகளை...

பள்ளி ஆண்டு விழாவுக்கு இரண்டு நாள் இருந்த போது விமுவின் மிஸ் எதிர் வீட்டுக்கு வந்திருந்தாள்.

பெற்றோர் பயந்து கேட்டனர். "என்ன, எங்க விமுவைப் பத்தி ஏதாவது கம்ப்ளெயிண்ட்டா?"

"ஒரு கம்ப்ளெயிண்ட்டும் இல்லை. ஆனால் ஒரு தகவல் உங்ககிட்டே சொல்லத்தான் வந்தேன். இப்போ கொஞ்ச நாளா விமு ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கறான். தானா சாப்பிடறான். தானாக் கை அலம்பிக்கிறான். தரையிலே தண்ணிப்பட்டால் துடைக்கறான். ஸ்டூல் போட்டுண்டு ஏறி ஃபேனை அணைக்கிறான். பசங்களைக் கூட்டி வெச்சிண்டு கதை சொல்றான். கராத்தே கத்துத் தர்ரான். ஆக்டிவிடீஸெல்லாம் ரொம்ப ஓவராயிடுத்துன்னு பிரின்ஸி சொல்லி அனுப்பினாள். ஒண்ணரை வயசுக்குள் இவ்வளவு வளர்ச்சி கூடாதாம். டென்ஸ் ஆயிடுமாம். அதைக் குறைக்கறதுக்கு ஏதாவது பண்ணினால் நல்லது" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

"எனக்கு இப்படி ஏதாவது வரும்னு தெரியும்," என்றவாறு விமுவின் அம்மா ஒரு பத்திரிகை கட்டிங் எடுத்து வந்தாள்.

வளசரவாக்கத்தில் இ.பி.இ.ஸி எக்ஸ்ட்ரா ப்ரிலியன்ஸ் எக் ஸ்ட்ரேக்டர்ஸ் ஃபர் சில்ட்ரன்'னு ஒரு ஸ்கூல் இருக்கு. அங்கே தான் சேர்க்கணும்... ஃபீஸ் இரண்டாயிரத்துஐந்நூறு. போனாலும் குழந்தை உருப்படணுமே... அளவு பார்த்து அவர்கள்தான் ப்ரிலியன்ஸைக் குறைப்பாnக. நாம ஏதாவது பண்ணினால் தப்பாயிடும்," என்று சொல்லி விட்டு, அதிகாலை ஐந்தரை மணிக்கு விமுவை அழைத்துக் கொண்டு அவன் பெற்றோர் வளசரவாக்கம் கிளம்பினர்.

*"அரைப் பணம் கொடுத்து அழச் சொல்லிட்டு, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன மாதிரி ஆச்சு"* என்றாள் என் மனைவி!

*பாக்கியம் ராமசாமி*...அவர்களின் பக்கத்திலிருந்து..

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...