Skip to main content

சுந்தரம் டாக்டர்

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்.”லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல போட்டு.. மாட்டைத் தூக்கி ஆட்ல போட்டு..”என்பதெல்லாம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் சில சொலவடைகள்.

ஆம்பலாப்பட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட தினங்களில் சைக்கிளில் பாப்பாநாடு வருவார். வேட்டி, மேலே புஷ் கோட் மாதிரி ஒரு சட்டை போட்டிருப்பார். பழைய தமிழ் சினிமாப் படங்களில் டாக்டர்கள் சிவப்பாக ஒரு தோல் பை வைத்திருப்பார்களே அதே போல ஒரு பை சைக்கிளில் தொங்கும். அந்தப் பையில் ஒரு சிரிஞ்ச், சில ஊசிகள், கொஞ்சம் பென்சிலின் ஊசி மருந்து, பென்டிட் சல்ஃபா மாத்திரைகள்,சில காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு மருந்துகள், இன்னும் அவருக்குத் தெரியும்,அந்தப் பகுதியில் என்னென்ன மருந்துகள் அதிகம் தேவைப்படும் என. அவற்றில் கொஞ்சம் இருக்கும். அப்போது எங்கள் ஊரில் ஃபா ர்மசி கிடையாது. முக்கிய மருந்துகள் வாங்க வேண்டுமானால் பட்டுக்கோட்டை அல்லது ஒரத்தநாடு போக வேண்டும்.

பாப்பாநாடு வந்தால்ஒரு இரண்டு அல்லது மூன்று இடங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இருப்பார். அதில் எங்கள் சோடா கம்பெனியும் ஒன்று. என் அப்பா மலேசியாவில் இயக்கத்தில் இருந்த போது கூலியாக வேலைக்கு வந்தவர் சுந்தரம். பக்கத்து ஊர்க்காரர் என்கிற வகையில் நெருக்கமான பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வயது குறைவு. அப்பா நாடு கடத்தப்பட்டு இங்கு தப்பித்தோடிவந்த பின், சுந்தரம் சுபாஷ் சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் சேர்ந்து, அவர்களின் போர்முயற்சி தோற்ற பின் இந்தியாவிற்கு ஓடி வந்தார். ஏதோ ஒரு சிறிய தொகை அந்த வகையில் ஐ.என்.ஏ பென்ஷனாக அவருக்கு வந்து கொண்டிருந்தது.

சுந்தரம் அண்ணன் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர், மருத்துவம், கூடை முடைதல் முதலியன அவர்களின் தொழில். குறவர்சமூகத்தை அரசு குற்றப் பரம்பரையாக வரையறுத்திருந்தது. இன்று அந்தச் சட்டம் ஒழிக்கப்பட்டாலும்அரசு அவர்களைக் குற்றப் பரம்பரையினராகத்தான் இன்றும் நடத்துகிறது. அது வேறு கதை.

ஆம்பலாப்பட்டுஒரு கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமம். அதில் ஒரு மூலையில் இவர்களின் குடும்பம். ஆம்பலாப்பட்டு ஒரு கம்யூனிஸ்ட்கிராமமும் கூட. இப்போது சி.பி.ஐ கட்சியின் விவசாயிகள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளடாக்டர் துரைமாணிக்கம் அந்த ஊர்க்காரர்தான். ஒரு இறுக்கமான சாதி ஆதிக்கமுள்ள அந்த ஊரில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் ஓரளவு சாதி ஒதுக்கல்களிருந்து தப்பித்து வாழ்ந்தார் என்றால், அதன் அடிப்படை அவர் கையில் இருந்த இந்த தொழிற் திறமைதான். எந்த மருத்துவ வசதியும் இல்லாத அந்தக் கிராமத்தில் கூப்பிட்ட நேரத்திற்கு வந்து உயிரைக்காப்பாற்றிச் செல்பவர் என்பதால்.

அந்த வயதிலேயே நான் கவனித்துள்ளேன். “சுந்தரம் இன்னைக்கி வருவானா” என என்னிடம் கேட்பவர்கள் (அப்பாவிடம்அப்படிக் கேட்கமாட்டார்கள்), அவர் வந்தவுடன், “தம்பி, ரெண்டு நாளா காச்சலுப்பா, எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது…… ” என்பார்கள். தமிழில் ‘தம்பி’ என்பதுஆதிக்க சாதியினர், கீழ் சாதியினரை விளிக்கும் ஒரு சொல்லுங் கூட என்பது எனக்கு அப்போதே அரைகுறையாகப் புரிந்தது. சிரித்துக் கொண்டே ஏகக் கிண்டலுடன் சுந்தரம் அண்ணன் வைத்தியத்தைத் தொடங்குவார். அம்மா ஒரு அகன்ற பாத்திரத்தில்கொதிக்கக் கொதிக்க சுடு நீரும், ஒரு தம்ளரில் தேநீரும் கொண்டு வந்து வைப்பார். ஊசி ஒன்றை எடுத்து சிரிஞ்சில் செருகி, கொதிக்கும் நீரை உறிஞ்சிக் கழுவியவாறே பேசிக் கொண்டிருப்பார்.

ஊசி, மருந்து ஆகியவற்றுடன்சுந்தரம் அண்ணனுக்கு அளிக்கப்படும் ஃபீஸ் இரண்டு ரூபாய்கள். பல நேரங்களில் அதையும் கொடுக்காமல் கடன் சொல்லிச் செல்வார்கள். கடும் நோய், சாதாரண சிகிச்சை போதாது என்றால் அதை விளக்கமாகச் சொல்லி தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திருக்கு அனுப்புவார். சில நேரங்களில் அவரே அழைத்துச் செல்வதும் உண்டு.

####

ஒருமுறை இருமிக்கொண்டே ஒருவர் வந்தார். நான் அந்தப் பக்கம் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன். “தம்பி மாக்ஸ்” என விளித்தார். ஓடி வந்தேன். “கணக்கு நோட்டில எழுதாத ஒரு நல்ல வெள்ள பேப்பர் ஒண்ணு கிழிச்சிட்டு வா” என்றார்.

அவ்வாறே செய்து விட்டு அருகில் நின்றேன். அந்தப் பேப்பரில்அவரை உமிழச் செய்து அதை மடித்து ஒதுக்குப் புறமாக கூறையில் செருகி விட்டு, “யாரும்இதைத் தொடாதீங்க” என்று சொல்லிக் கிளம்பினார். ஆவல் மேலிட நான் எதுக்குண்ணேன் என்றேன். “தம்பி இது முத்திய காச நோய்க் கேசு. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்தபேப்பரை விரிச்சு வெளிச்சத்துல பார்த்தா காச நோய்க் கிருமி இருந்தா இந்தக் காகிதத்தில ஓட்டை விழுந்திருக்கும்.”

சுந்தரம் அண்ணனின் “தவறான” வைத்தியத்தால் யாரும் செத்துப் போனதாக அங்கு வரலாறே இல்லை.

#

அம்மாவுக்குக்கையில் ஒரு கட்டி. வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகையாய் வந்தது.”சுந்தரம் இன்னைக்கி வர்ற நாள். வரலேன்னா பட்டுக்கோட்டைக்குப் போகலாம்” எனஅப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

சுந்தரம் அண்ணன் சரியாகப் 11 மணிக்கு வந்தார். அப்பா எல்லாவற்றையும் சொன்னார். சுந்தரம் அண்ணன் அம்மாவைக் கூப்பிட்டுப் பார்க்கக் கூட இல்லை.. “தம்பி மார்க்ஸ்” என்றார். “போயி பனாமா பிளேடு ஒண்ணு வாங்கிட்டு வா” என்றார்.

அப்போது ‘பனாமா’.’பாரத்’ என இரண்டு பிளேடுகள் மட்டும் உண்டு.பனாமா கொஞ்சம் நல்ல பிளேடு பத்து பைசா விலை. பாரத் ஆறு பைசா. ஓடி வாங்கி வந்தேன்.

அம்மாவைக் கூப்பிட்டுபெஞ்சில் உட்காரச் சொன்னார். “அந்தப் பக்கம் திரும்பிக்கிங்க அக்கா” என்றார். “மார்க்ஸ் நீ அந்தப் பக்கம் ஓடு” என விரட்டினார்.

நான் பயந்து கொண்டேஓடி, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா ரொம்பவும் பயந்திருந்தார். பிளேடை எடுத்து, கொதிக்கும் சுடு நீரில் ஒரு முறை தோய்த்துவிட்டு கட்டி மீது வைத்து அழுத்தி இரக்கமில்லாமல் அவர் கீறிப் பிதுக்கியபோது அம்மா வாய்விட்டுக் கத்தினார். நானும்தான். அப்பாவின் சலவை செய்த வேட்டியிலிருந்துஒரு துண்டை நறுக்கி ஒரு பச்சிலைச் சாற்றில் அதைத் தோய்த்துக் காயத்தின் மீது வைத்துஇறுகக் கட்டினார். ஏதோ ஒரு ஆன்டி பயாடிக் ஊசியைப் போட்டு, ‘பெய்ன் கில்லர்’ மாத்திரைகள் இரண்டையும் கொடுத்துவிட்டுஅவர் அகன்ற காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.

இரண்டு நாட்களுக்குப்பின் அவர் வந்து கட்டைப் பிரித்தபோது அம்மாவின் காயம் பெரிதும் ஆறி இருந்தது. மரபு வழி நாட்டு வைத்தியத்துடன் தற்போதைய சில அல்லோபதி மருந்து வகைகளையும் இணைத்து ஒரு வகையான holistic / integrated மருத்துவமுறையை அவர் தன் அனுபவ அடிப்படையில் உருவாக்கி இருந்தார்.

#

தம்பையா நாயுடு மாயூரத்திற்கு அருகில் உள்ள செம்பனார் கோவிலைச் சேர்ந்தவர். மலேசியாவில் அப்பாவின் தொழிற்சங்க அலுவலகத்தில் சமையற்காரராக இருந்தவர். அவரும் இரண்டொரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து இரண்டொரு நாட்கள் தங்கிச் செல்வார். அவருக்குக் கடும் மூல வியாதி. குறவர் சமூகத்தினர் முல பவுத்திர சிகிச்சையில் தேர்ந்தவர்கள். சுந்தரம் அண்ணனும்தான். ஆசன வாய் சார்ந்த வைத்தியத்தை அக்காலத்தில் “கீழ்” சாதியினருக்கு ஒதுக்கி இருந்திருப்பார்கள் போலும்.

அப்பா கடிதம் எழுதி இங்கே அவரை வரச் சொன்னார். இம்முறை அவரோடு அத்தையையும் அழைத்து வந்திருந்தார்.

சுந்தரம் அண்ணன் வந்தவுடன் சிகிச்சை ஆரம்பமாகியது. அப்பா சலவை செய்த பழைய எட்டு முழ வேட்டி ஒன்றை எடுத்துத் தந்தார். அம்மா கொதிக்கக் கொதிக்கச் சுடு நீர் கொண்டு வந்தார்.

சுந்தரம் அண்ணனும் அப்பாவும் இரண்டு ஒதியம் பெஞ்சுகளையும் ஒரு மூலையில் கொண்டு போய்ப் போட்டார்கள். சாக்குப்படுதாவை எடுத்து மறைவு கட்டினார்கள். தம்பையா மாமாவை அழைத்துக் கொண்டு மறைவிற்குள்சென்றார் சுந்தரம் அண்ணன். சற்று நேரம் கழித்து நான் மெதுவாகச் சென்று படுதாவை விலக்கிப்பார்த்தேன். தம்பையா மாமா ஆடைகளின்றிக் குப்புறப் படுத்திருந்தார். “ஏய், தம்பி,மாக்ஸ், ஓடு, ஓடு.. இங்கெல்லாம் வரக் கூடாது” என விரட்டினார் அண்ணன்.

கச்சிதமாக ஆபரேஷன்முடிந்தது. அடுத்த சில நாட்களில் தம்பையா மாமாவும் அத்தையும் ஊருக்குத் திரும்பினர்.

#

சுமார் 18 ஆண்டுகள் இருக்கலாம். தமிழக அரசு பெரிய அளவில் ‘போலி டாக்டர்கள்’ மீது நடவடிக்கை எடுத்தது. தினசரி நாளிதழ்களைத் திறந்தால் அந்த ஊரில் போலி டாக்டர் கைது. இந்த ஊரில் இருவர் கைது எனச் செய்திகள் வரும். பட்டதாரி மருத்துவர்கள் அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவு இது. பட்டமில்லா இந்த கிராமத்து வைத்தியர்கள் தலைமறைவாயினர்.

போலி டாக்டர்கள்கைது என்பதைப் பார்க்கும் போதெல்லாம் என்க்கு சுந்தரம் அண்ணன் ஞாபகம்தான் வரும்.மனம்நொந்து போவேன். ‘போலி’ டாக்டர்கள் ஏன் உருவா கின்றனர்? போதிய அளவில் அரசு மருத்துவ மனைகளும், மக்கல் தொகை வீதத்திற்கு ஏற்ப மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத ஒரு நாட்டில் ‘போலி’ டாக்டர்களும் இல்லாது போனால் கிராமப் புற மக்களின் கதி என்ன? என்பதை விளக்கி நான் எழுதிய கட்டுரை தினமணி நாளிதழில் முழுமையாகப் பிரசுரமானது. தலைமறைவாய்த் திரிந்த இந்தப் பட்டதாரி மருத்துவர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவர்கள் நீதி மன்றத்தை அணுகினர். அவர்கள் ஆதாரமாய்க் காட்டியஆவணங்களில் என் கட்டுரையும் ஒன்று.

பின் அவர்கள் நாமக்கல்லில் ஒரு மாநாடு கூட்டியபோது நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். ‘போலி’ டாக்டர்கள் மீது எனக்கு உண்டான பரிவின் பின்னணியில் சுந்தரம் அண்ணனின் நினைவுகள் இருந்தன.

#

பாப்பாநாட்டுக்கும்எனக்கும் எல்லாத் தொடர்பும் அறுந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லறைத் திருநாளன்று சென்று அப்பா, அம்மா கல்லறைகளுக்கு மாலை போட்டு வருவது வழக்கம். இப்போதுஅதுவும் நின்று விட்டது. கடைசி முறை சென்ற போது சின்னக் குமுளை கலியமூர்த்தியை விசாரித்தேன்.”சுந்தரமா, அவர் இப்ப பாப்பாநாட்டுக்கே வந்துட்டாரே. முன்ன மாதிரி வைத்தியமெல்லாம்செய்றதில்ல. வயசாயிட்டு” என்றார். இப்போது அங்கே ஒரு ஆரம்ப சுகாதார மருத்துவ மனை, இரண்டு மூன்று பட்டதாரி டாக்டர்கள், சில பார்மசிகள் எல்லாம் உள்ளன.

அவர் வீட்டை விசாரித்துச் சென்றபோது, கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்துவிட்டு, “யாரு, தம்பி மாக்சா?”எனக் கேட்டுக் கைகளைப் பற்றிக் கொண்டார். கண்கள் நீரைச் சொறிந்தன.

என் கண்களுந்தான்.

இணைப்பு:

சொல்ல மறந்து போனேன், சுந்தரம் டாக்டரின் மூத்த அண்ணன் டாக்டர் தியாகராஜன். சின்ன வயதிலேயே ஊரை விட்டு ஓடிச்சென்றவர். விழுப்புரத்தில் பாரம்பரிய மருத்துவம் செய்து பின் காந்தி சிலைக்கருகில் “ஆரோக்கிய மெடிகல் ஹால்” என ஒரு மருத்துவமனையையே நிறுவினார். அவரது மருத்துவ மனையில்இரண்டு பட்டதாரி மருத்துவர்கள் வேலை செய்தனர்.

1960 களில் அவர்விழுப்புரம் முனிசிபல் சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தந்தை பெரியார், நடிகர்திலகம் சிவாஜி, புதுச்சேரி சுப்பையா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். வாசவி ஓட்டலுக்குஎதிர்ப்புறச் சாலையில் இருந்தது அவர் வீடு.

விழுப்புரத்தைக்கடக்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு அது சாத்தியமாய் இருந்தது.

அசலூர்க்கார ஒரு குறவர் சமூக மனிதர் விழுப்புரம் போன்ற ஒரு ஊரில் முனிசிபல் சேர்மனாவது இன்று சாத்தியமா?

(இந்த நினைவஞ்சலி டாக்டர் தியாகராஜன் அவர்களின் இளம்வயதில் மறைந்துபோன புதல்வியும் என் பால்ய சினேகிதியுமான மல்லிகாவின் நினைவுகளுக்குச் சமர்ப்பணம்.)

-அ.மார்க்ஸ்.

குக்கூ குழந்தைகள் வெளி ( Cuckoo Movement for Children)/  17/07/2020


Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...