o ஆற்று மணலின் ஸ்பரிசம் கால்களில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறது.
o தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தம் காதில் கீதம் இசைக்கிறது.
o மெல்லிய குளிர் தென்றல் உடலைத் தழுவிச் செல்கிறது.
o ஆற்றில் இறங்கியதும் ஆற்றுநீரின் குளிர்ச்சி உடல் முழுக்க வியாபிக்கிறது.
o சிறு சிறு மீன்கள் கால்விரலில் கடித்து விளையாடுகிறது.
o ஆற்றில் மூழ்கியவுடன் ஆற்றுநீரின் ஓட்டத்தில் உடல் மெல்ல நகர்கிறது.
o கைகளை விரித்து நீரைக் கிழித்து கால்களால் தண்ணீரை உதைத்து நீந்த முயற்சி செய்தாலும் உடல் அந்த இடத்திலேயே இருக்கிறது.
o கைகளால் நீரில் வட்டம் வரைந்தும் நீரை வாரி இரைத்தும் விளையாடும் போது
குழந்தையிடம் உருவாகும் மென்மையான மகிழ்ச்சி பெரியவர்களான நமக்கும்
ஏற்படுகிறது.
o நீரில் மூழ்கி கால்களுக்கு அடியில் இருக்கும் மொழு
மொழு கூழாங்கற்களை எடுத்துப் பார்க்க அதை நம்மிடம் ஆண்டுகளாக அது ஒழுகி
வந்ததின் கதை பேசுகிறது.
o ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அந்த இடம் ஆழமாக இருக்குமா என்ற ஒருவித எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.
o ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும், நீந்தும்போதும் நெஞ்சு நிறைய சுத்தமான
காற்று உட்புகுந்து நெஞ்சை விரியச் செய்கிறது. மனமும் உடலும் புத்துணர்வு
பெறுகிறது.
இந்த ஆற்றுக்
குளியலையும் குளியலறையில் வாளியில் தண்ணீர் நிறைத்து அது சிறிய கப்பால்
எடுத்து தலையில் ஊற்றிக் குளிப்பதையும் நினைத்துப் பாருங்கள்.
எத்தனை வேறுபாடு?
இது நாங்கள் பயிற்சியில் கூறும் கருத்து.
எதற்குத் தெரியுமா?
வீட்டில் மொழியைக் கற்று வந்த குழந்தையிடம், தன் உணர்வுகளை அழகாக எடுத்துரைக்கத் தெரிந்த குழந்தையிடம், வீட்டில் பல்வேறு அனுபவச் சொத்தோடு வரும் குழந்தையிடம், ஒரு சொல் மட்டும் கூறி, அதை பலமுறை வாசிக்க வைத்து, அதைப் பலமுறை எழுத வைக்கும் வகுப்பறை அந்தக் குழந்தைக்குக் குளியலறைக் குளியலாகத்தான் தோன்றும். ஒருபோதும் ஆற்றுக்குளியலின் சுகத்தை அளிக்காது.
அதே நேரத்தில் கதை சொல்லி, பலபதில் வினா கேட்டு, அவர்களிடம் கலந்துரையாடி, பல பதில்களை ஊகிக்க வாய்ப்பளித்து, அப்பதில்களுள் எந்தப் பதில் கதையில் நடந்திருக்கும் நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கற்றல் அட்டையை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்து, அவர்கள் பதில்களைக் கண்டுபிடித்து, மீண்டும் அந்த நிகழ்வைப் பற்றிக் கலந்துரையாடி, பிறகு சில செயல்பாடுகள் செய்து... என்ற படிநிலைகளைப் பின்பற்றும் நீள்கதைப் பாடத்திட்ட வகுப்பு ஆற்றுக்குளியலின் அத்தனை சுகத்தையும் குழந்தை அளிக்கிறது.
இந்த சுகத்தை அனுபவிக்க நம் குழந்தைகளுக்கு உரிமையுண்டு. அதை அவர்களுக்கு மறுப்பது நாம் செய்யும் பெரிய குற்றம் என்பதில் ஐயமில்லை.
இந்த எடுத்துக்காட்டு வேலவனின் மனத்தில் உதித்தது. பாராட்டுகள் வேலவன்.
PC: Pixabay
ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்
Qrius Learning Initiatives, Coimbatore.
Comments
Post a Comment