வெண்மை
தினம் ஒரு கதை - 94
‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’
‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’
‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்.
‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்.
பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்.
‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’
பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்.
அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்.
‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’
‘‘இது எதுக்கும்மா?’’
‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்.
பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.
அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்.
‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்.
பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்.
பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்.
‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக.
படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன். உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்.
பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள். வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்.
‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?
எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்.
தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.
Comments
Post a Comment