சிறுவயதில் சுயநலக்காரனாக இருந்த ஒருவன் நல்லபொருள் எதுவாக இருந்தாலும்
எது கிடைத்தாலும் அதை தானே கைப்பற்றிக் கொள்வான்.அப்படியான குணத்தின் காரணமாகவே மெதுவாக எல்லோரும் அவனைவிட்டு விலக ஆரம்பித்தார்கள்.
ஒருகட்டத்தில் அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள்.
அவனோ தன்மீது தவறிருக்கிறது என்றே நினைக்கவில்லை மற்றவர்களைப்பார்த்து
குறைகள் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
ஒருநாள் தன் தந்தை சாப்பாடு சமைத்து அதை இரு தட்டுகளில் பிரித்து சாப்பாட்டு மேஜைமேல் வைத்தார்.
ஒரு தட்டிலிருந்த சாப்பாட்டின் மேல்மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது
இன்னொன்றின் மேல் முட்டையில்லை.
தந்தை மகனிடம் கேட்டார் மகனே உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ நீயே எடுத்துக் கொள் என்றதும், முட்டை வைத்திருந்த சாப்பாட்டுத்தட்டை எடுத்துக் கொண்டான்
சாப்பிட ஆரம்பித்தவன் தன்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக தனக்குத்தானே
தன்னைப் பாராட்டிக்கொண்டான்,
அதேநேரம் தந்தை அவருடைய சாப்பாட்டுத்தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது
அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய தட்டுச் சாப்பாட்டின் அடியில்
இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப்பார்த்த மகன்மிகவும் வருத்தப்பட்டான். அவசரப்பட்டு தான் எடுத்த முடிவுக்காக தன்னைத்தானே திட்டிக்கொண்டான். தந்தை
மென்மையாக சிரித்தபடி மகனிடம் சொன்னார்..? மகனே நினைவில் வைத்துக்கொள்
உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம் மற்றவர்களுக்குக் கிடைப்பதை
நீ அடையவேண்டுமென நினைத்தால் இழப்பு உனக்குத்தானெனச் சொன்னார்.
அடுத்தநாளும் தன் தந்தை அதேபோல சமைத்து சாப்பாட்டை மேஜையின்மேல் வைத்தார்.
முதல் நாளைப்போலவே ஒரு தட்டிலிருந்த சாப்பாட்டில் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது
இன்னொன்றில் இல்லை.தந்தை மகனிடம் கேட்டார்..? மகனே உனக்கு இந்த இரண்டில்
எது வேண்டுமோ நீயே தேர்ந்தெடுத்துக்கொள் எனச் சொன்னதும் இந்தமுறை அவன் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து முட்டை வைக்கப்படாத தட்டை எடுத்துக் கொண்டான். அன்றைக்கும் அவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.சாப்பாட்டுத் தட்டிலிருந்த சாதத்தின் அடிவரைஎவ்வளவோ துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைக்கூடக் கிடைக்கவில்லை.
அன்றைக்கும் அவனின் தந்தை சிரித்தபடியே சொன்னார்..? மகனே எப்போதும்
அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது ஏனென்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும் தந்திரத்தில் விழவைக்கும் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் நீ கற்றுக்கொள்ள முடியாதென சொல்லி வைத்தார்.
மூன்றாவது நாளும் அதேபோல சாதத்தை சமைத்து எடுத்துவந்தார் தந்தை இரு தட்டுக்களையும் மேஜையின்மேல் வைக்க வழக்கம்போல ஒரு தட்டிலிருந்த முட்டை
மற்றொன்றில் இல்லை. தந்தை கேட்டார்..! மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள்.உனக்கு
இவற்றில் எது வேண்டும்? இந்தமுறை அவசரப்பட்டு சாப்பாட்டு தட்டை எடுத்துவிடாமல்
பொறுமையாக அவன் தந்தையிடம் சொன்னான். தந்தையே நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர் நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக பெரிதாய் உழைக்கிறீர்கள்
எனவே முதலில் நீங்கள் உங்களுக்கான தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை
நான் எடுத்துக்கொள்கிறேன் என்றதும் மகனின் கோரிக்கையை நிராகரிக்காமல்
முட்டை இருந்த சாப்பாட்டுத்தட்டை எடுத்துக்கொண்டார்.மகன் அவனுக்கான சாப்பாட்டை
சாப்பிட ஆரம்பித்தான் நிச்சயமாக இந்தத்தட்டில் முட்டையிருக்காதென நினைத்த மகனுக்கு
அன்றைக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. சாப்பாட்டின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப்பார்த்த மகனுக்கு ஆச்சர்யம் வந்தது. ஆச்சர்யத்தில் அதிர்ந்து உறைந்த மகனிடத்தில்தந்தையானவர் சொன்னார்.?
"மகனே என்றைக்கும் நான் சொல்வதை நீ நினைவில் வைத்துக்கொள் மற்றவர்களுக்கு
நீ நல்லது நினைக்கும்போதெல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும். மற்றவர்களுக்கு
நீ தீமைகள் செய்ய நினைத்தால் உனக்கும் தீமையே நடக்குமெனச்சொல்ல வாழ்வியல் உண்மையை பெரிதாய் உணர்ந்தவனாய்.
ஆனந்தக்கண்ணீரோடு மகனானவன் தலையசைக்க ஆகச்சிறந்த கதையும் முடிந்தது மக்களே.
Comments
Post a Comment