ஆலமரம்
எண்ணற்ற
குழந்தைகள்
தவழ்ந்து பழகியதும்
நடந்து பழகியதும்
இங்கேதான். - இந்த
கிராமத்தின்
தெருக்கள்
மண் தரைகளாக
இருந்தபோது ...
பல - பஞ்சாயத்துகள்
இங்கேதான்
வழக்காடி
தீர்க்கப்பட்டுள்ளது...
வாய்தா இல்லாமல்.
பகலில்...
ஆண்கள் பலருக்கும்
போக்கிடம் இதுவே.
புளியங் கொட்டைகளை
ஒருபுறம் மட்டுமே
தேய்த்து...
"தாயக்கரம்" ஆடுவதும்...
கற்கள் வைத்து
"ஆடுபுலி" ஆட்டம்
ஆடுவதுமாய்
உள்ளூர் கதைகள் முதல்
உலக நடப்புகள் வரை
இங்கேதான்
பரிமாறப்படும்.
இரவில்...
முதியவர்களுக்கும்
"விவரம்"அறிந்த
குழந்தைகளுக்கும்
இதுவே படுக்கை அறை.
ஒரு இரவில்...
ஊருக்குள் புகுந்த
திருடனை பிடித்து
கட்டி வைத்தது
இந்த விழுதில் தான்.
இதன் கீழ்ப்பகுதியை
ஆண்கள் மட்டுமே
ஆக்கிரமித்து இருந்தாலும்...
மேலே
பல குடும்பங்களாய்...
பறவை இனங்கள்.
தலைமுறைகள்
பல தாண்டியும்
இன்னும்
எத்தனையோ
ஞாபகங்களை
தன்னகத்தே
தாங்கி நிற்கிறது - இந்த
காரை திண்ணை ஆலமரம்...
*ஞாபகங்களுடன் - S.நாகராஜன்*
Comments
Post a Comment