Skip to main content

Saravanan Chandran

Saravanan Chandran
தெற்கே பெரிய துரையான் கோவிலுக்குப் போகிற வழியில் இருக்கிறது முருகையன் காடு. பத்து குழி அளவிருக்கிற கரிசல் நிலம். "எங்க மாமனாரு என்னோட சம்சாரத்தைக் கையில பிடிச்சு கொடுத்தப்ப கொடுத்த நெலம் இது. அப்ப அவரு சொன்னாரு. 'எம்புள்ளைய காப்பாத்துறத சொல்ல முடியாது. மனுஷ மனசு இந்த விஷயத்தில எப்டீனாலும் தடம் பாஞ்சிரும். அந்த விஷயத்தில ஆனாளப்பட்ட ஆண்டவனே உறுதி கொடுக்க முடியாது. ஆனா நெலத்தை மட்டும் தறிகெட்டு கைவிட்டிராத' அப்படின்னார். ஆனா நான் ரெண்டையுமே கடைசி வரை கைவிடலை" என்றார் ஒருதடவை.
அந்தப் பக்கம் எல்லோருமே மானாவாரி விவசாயம் செய்கிறவர்கள். மழையைக் குறி வைத்த வானம் பார்த்த ஒருபோக விவசாயம். அதிகமும் பருத்தி போடுவார்கள். இல்லாவிட்டால் சோளம் போடுவார்கள். மொச்சை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது பூவெடுக்கும் சமயத்தில், அந்த ருசியைத் தேடி யானைகள் வந்து விடுகின்றன. ரெண்டு வருடத்திற்கு முன்பு ஒருத்தரை மிதித்துக் கொல்லவும் செய்தன.
ஆகையால் இப்போதெல்லாம் மொச்சையைக் கைவிட்டு விட்டார்கள். சோளமே பிரதானம். மற்ற காட்டுக்காரர்கள் பலரையும் சந்தித்திருக்கிறேன். எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஒரே விஷயத்தைச் சொன்னார்கள். "என்ன அதிசயமோ தெரியலை. நாம ஒரு குழிக்கு பதினாறு மூட்டை எடுத்தா. முருகையன் காட்டில மட்டும் குழிக்கு இருபத்திரண்டு மூட்டை கெடைக்குது. இத்தனைக்கும் அவன் காட்டை ஒட்டினதிலயும் பதினாறுதான்" என்றார் ஒருத்தர்.
ஒருநாள் பொறுக்க மாட்டாமல், இப்படி எல்லோரும் சொல்வதைச் சொல்லி அவரிடமே கேட்டும் விட்டேன். "நாம என்ன பூமில இல்லாததையா நிலத்தில உரமா தூவறோம். எல்லாரும் செய்றதத்தான் செய்றோம். என்ன மத்தவங்க வேலையாள செய்யச் சொல்லிட்டு வரப்பில நின்னு மேற்பார்வை செய்றாங்க. நானும் என் சம்சாரமும் இறங்கி ஆளோட ஆளா நின்னு செய்றோம். நம்மதுங்கற தெளிவுல செய்ற எதுவுமே துலங்கி வந்திடும். தப்பில்லாம பயிர்க தம்பாட்டுக்கு முளைச்சு வந்திரும். நமக்கே நம்ம நிலத்து மேல பிடிப்பு வராட்டி எப்படி. என்னைக்கு நம்ம கால் தரையில பாவுதோ அப்பத்தான் அதை இறுகப் பிடிக்கிறோம்னு அர்த்தம்" என்றார். சுருக்கங்கள் கொண்ட முகத்தில் முளைத்திருந்த கண்கள் ஒளிர்விட்டன. பருத்திப் பூவைப் போலவும் இருந்தன அவை.
அவரே அழைத்துப் போய் சில காடுகளைச் சுட்டிக் காட்டினார். அவர் சொன்ன மாதிரியே புதிய சம்சாரிகள் சிலர் வரப்பில் நின்று தூரத்தில் வேலை செய்கிறவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் சொன்னதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. நானுமேகூட வெள்ளை சட்டை பார்ட்டியாகத்தான் அதுவரை இருந்து கொண்டிருந்தேன். சட்டென உள்ளுக்குள் ஒரு நீர்க்குமிழி உடைந்தது போலவிருந்தது. மொச்சையில் பூவிட்டிருந்ததைப் போல மனம் மணமாயிருந்தது.
அதற்குப் பிறகு இறங்கிச் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தேன். அவர் அடிக்கடி வந்து பார்த்து உற்சாகப்படுத்தவும் செய்தார். "நல்ல சம்சாரிக்கு தூங்கறப்பவும் கருக்கல்ல எந்திருக்கயிலயும் உடம்பு வலி இருக்கணும்" என்றார். இதையேதான் என்னுடைய கோச் சொல்வார். இதை ரொமொண்டிசைஸ் செய்து சொல்லவில்லை. யாராவது உங்களுடைய தொடர்பில் விளையாட்டு வீரர்களாக இருந்தால், அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
சில பயிற்சிகளுக்கு அப்புறம் அடுத்த ஒரு வாரத்திற்கு, குளிக்கும் போது சொம்பைத் தலைக்கு மேல் தூக்கவே முடியாது. கழிவறைக்கே தவழ்ந்து கொண்டுதான் போக வேண்டும். ஆனால் கழுத்தில் மெடலை ஏந்துகையில் அவ்வலியெல்லாம் கால்த் தூசு. அந்தக் காலத்திற்குப் பிறகு, இப்போது மக்களோடு மக்களாய் களத்தில் இறங்கி வேலை செய்கையில் பழைய உத்வேகத்தைப் பெறுகிறேன். இது என் நிலம். என் கால்படாத துண்டு பூமிகூட இருக்கக்கூடாதென சபதம் போட்டு நடக்கிறேன். பளுவைத் தூக்குகிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கால் எனக்கான நிலத்தில் அழுத்தமாய்ப் பாவுகிறது. உடல் வலியோடு தூங்கப் போய், உடல் வலியோடு விழிக்கிறேன். சுகமாய் இருக்கிறது அவ்வலி!

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...
  ஆச்சி,சின்ன ஆச்சி,பெரிய ஆச்சி 3 பேர் வீட்லயும் விறகடுப்பு காணம போச்சி, 1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும் 1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது. மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப்பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு ...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...