Skip to main content

On the way to School


Image may contain: 2 people, people sitting and outdoor






பிரெஞ்ச் இயக்குநர் பாஸ்கல் பிளிசன் இயக்கிய ஆவணப்படம் 'ஆன் தி வே டு ஸ்கூல்'. நெடுந்தூரமும் கடுஞ்சவால்களும் நிறைந்த பாதைகளில் பயணித்து, தினசரி பள்ளிக்கூடம் போகிற நான்கு வெவ்வேறு குழந்தைகளின் நிஜவாழ்வினை கதையாகக் காட்டுகிறது இந்த ஆவணப்படம். நான்கு குழந்தைகளுமே உலகின் நான்கு மூலைகளில் வாழ்பவர்கள். கல்விக்கான தாகமே அவர்கள் நால்வரையும் சாமானியத்திலிருந்து பெயர்த்தெழுப்பி வணங்கும் தொலைவில் உயர்த்தி வைக்கிறது.

ஜாக்சன் (11 வயது) மற்றும் அவன் தங்கை இருவரும் கென்ய தேசத்தின் உட்கிராமத்திலிருந்து, சமதளப் புல்வெளிப் பாதையான வெப்பமண்டல சவானா காடுகளில் யானைகள் வழித்தடப்பகுதிகளில் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தை 2 மணி நேரம் நடந்து பயணித்து, சிலநேரங்களில் யானைகளின் அச்சுறுத்தலைக் கடந்து பள்ளியை அடைந்து மாலையில் அதே வழியில் வீடு திரும்புகிறார்கள். ஒவ்வொரு மலையாக ஏறி்யானைகளின் மேய்விடத்தை அறிந்து தங்கள் தினசரி வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனது இரு குழந்தைகளையும் இறுகப்பற்றி ஜாக்சனின் தந்தை நாள்தவறாது கேட்கிறார், 'இன்று பாதுகாப்பாக பள்ளியை அடைந்துவிடுவீர்கள் அல்லவா?!'

ஜஹீரா (12 வயது) என்கிற மொராக்கோ தேசத்தைச் சார்ந்த இசுலாமியச் சிறுமி, தன்னையும் தன் தோழிமார்களையும் தயார்படுத்திக்கொண்டு, வாரத்தின் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மலைக்குன்றுகள் வழியாக 22 கி.மீ தூரத்துக்கு நடந்துசென்று நான்கு மணிநேரம் கழித்து கல்விக்கூடம் அடைகிறாள். பயணம் முழுக்க கையில் ஒரு சேவலை சுமந்துசெல்லும் அவள் பள்ளிக்கு அருகில் உள்ள சந்தையில் அதை பண்டமாற்றி திண்பண்டம் பெற்றுக்கொள்கிறாள். ஜஹிராவின் படிக்காத பாட்டி கைநூற்பு நூற்றபடி சொல்கிற, "நல்லா படி. அறிவுள்ள நல்லவளா வளரு" என்ற வார்த்தைகள் தரும் வீரியத்திலும் குடும்பத்து அக்கறையிலும் அவ்வளவு தொலைவுவரை தினமும் வைராக்கியமாக நடக்கிறாள். கால் வலித்து வழியில் ஓய்வெடுக்கும் தோழியிடம் "கல்வி கடினமானதுதான். ஆனாலும் அதை நாம் பெற்றாக வேண்டும். நட" என பாதங்களை வருடிக்கொண்டே சொல்கிறாள்.

கார்லிட்டோ (11வயது) எனும் சிறுவன் அர்ஜென்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரான படகோனிய மலைப்பகுதி வழியாக தினமும் கல்விச்சாலைக்கு குதிரையில் செல்கிறான். 18 கி.மீ தூரம் 1.30மணிநேர குதிரைப்பயணம். பின்னால் உட்காரந்து அவனை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள் அவன் தங்கையான ஒரு குட்டிச்சிறுமி. செங்குத்தான சரிவுகளிலும் நீர்நிறைந்த கல்லாறுகளிலும் குதிரை அவர்களை அழைத்துச்செல்கிறது. ஆபத்துப் பயணத்தில் அவர்களைப் பாதுகாப்பாக வழிநடத்த, கார்லிட்டோவின் கையில் அவனுடைய தந்தை தினமும் கடவுள் உங்களுடன் வருவார் எனச்சொல்லி கொடுத்தனுப்புவது ஒரு 'துணி ரிப்பன்' மட்டும்தான். மலையடிவாரக் சிறுகோவிலில் அந்த ரிப்பனைக் கட்டிவிட்டு மண்டியிட்டுப் பிரார்த்திக்கிறார்கள் இருவரும். தகரக்கூரையின் கீழ் விரிந்த கைகளோடு இருக்கும் ஒரு சிறிய கடவுள் மொத்த மலையையும் ஆசீர்வதிக்கிறார்.

சாமுவேல் (11 வயது) தமிழகத்தின் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிச் சிறுவன். ஒரு உடைந்துபோன சக்கரநாற்காலியில் சாமுவேலை உட்கார வைத்து, அதனை தள்ளியும் இழுத்தும் அவனைப் பள்ளிக்கு கொண்டுபோகிறார்கள், அதே பள்ளியில் படிக்கும் அவனுடைய இரு குட்டிச் சகோதரர்களும். ஒன்றரை மணிநேரத்தில் 4 கி.மீ தூரப் பயணம் தினமும் . மணல்வெளிகள், பள்ளக்குழிகள், ஈரநிலங்கள், சமதளமற்ற சாலைகள் இத்தனையும் கடந்து உருளும் அந்த உடைந்த நாற்காலியின் சக்கரங்கள், இறுதியில் வகுப்பறை வாசல்வந்து நிற்கிறது. சிரமமான பாதைகளைச் சிரிப்புகளைக் கொண்டு கடந்துவிடுகிறார்கள். வழியில் சக்கரம் கழன்றுவிட ஒரு சைக்கிள் கடைக்காரர் அதை சரிசெய்து மகிழ்வோடு வழியனுப்பி வைக்கிறார். பள்ளி வந்ததும் எல்லா மாணவர்களும் சாமுவேலை அணைத்துக்கொள்கிறார்கள். நடக்க முடியாத தன் மகனுக்கு அலைமோதும் கடற்கரையில் வைத்து நடை பழக்குகிறார் அவனுடைய அன்னை.

நான்கு சிறுவர்களும் கல்வியின்வழி தாங்கள் அடையவிரும்பும், தங்கள் மனம் அடைகாக்கும் எதிர்காலக் கனவினை சொல்லிமுடிக்கும் காட்சியோடு நிறைவடைகிறது இந்த ஆவணப்படம்.

***
அறிவு என்பது எப்போதும் வென்றெடுத்தல் வழியாகவே நிகழ்கிறது. தங்களையே பணயம் வைத்துப் பயணம் செய்து கல்வியை அடைகிற இக்குழந்தைகளின் துணிவு, இன்று உலகத்துக்கே கல்வியாகியுள்ளது. தடைகளின் பெருங்காட்டில், தனக்கான ஒற்றையடிப்பாதையை தானாகவே உருவாக்கிக்கொள்கிறது துணிவுமனம். எது கல்வி? என்றப் பெருவினாவைத் தாண்டி, 'எனது கல்வி' என்ற தன்னுரிமைதான் அறிவின் முதற்படி. அடையும் உரிமையில் அனைவரும் சமம் என்ற பொதுநிலையை எய்துதல்.

புற்றாழத்திலிருந்து ஊர்ந்து கிளம்பிவரும் கரையான், தரையெல்லையை அடைந்ததும் சிறகடித்து வெளிபறக்கும். இந்த நிகழ்வற்புதம் இயற்கையின் அனிச்சை. குழந்தையின் மனப்புலர்வு அந்த அனிச்சையிலிருந்து புறப்படுபவை. சுனைக்கும் தாகத்துக்கும் இடையே உள்ள தொலைவு வெகுக்குறைவு, கிட்டத்தட்ட சுழியம். ஆனால், அலையவைத்தே அதை அறியவைக்கிறது வாழ்வுவிதி.

சுழலப் பழகுவதை பூமி நிறுத்துவதில்லை, குழந்தைகள் கற்பதும் அப்படித்தான், இறுதியற்றது! இருளையும் ஒளியையும் கொண்டு ஒரு புலரியைப் படைத்தலே எக்காலத்துக்குமான இலக்கு.

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

Thamizh Poem

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

+6   அய்யனார் தங்கவேலு ஆலகிராமம் October 20, 2017 இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல ் விக்கிறான். உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான். மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் . நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான். இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான். Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செ...