ரோசமிருந்தால்
செத்துப்போயிடலாம்.
-----------------------------
இன்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவு நாள். ஒருத்தரும் நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த காங்கிரஸ்காரர்களும் இவரை மறந்து போனார்கள். அறிவாலயத்தை போற்றிப் புகழவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. பிறகு எங்கே ஓமந்தூராரைப் பற்றி நினைக்க.
சாதாரண விவசாய குடும்பம்தான். சுதந்திரப் போராட்டத் தியாகி. முதல்வர் பதவிக்கு ராஜாஜியா- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியா என்ற போட்டி. கட்சி நிர்வாகிகள் இவரையே விரும்பினார்கள். இவரோ, ‘சரிவராது’ என மறுத்தார். காமராஜர் உள்ளிட்ட பலரும் அவரை வற்புறுத்தினார்கள். கட்சியினர் யாரும் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற கண்டிப்போடு பதவி ஏற்றார்.
பதவி ஏற்ற உடனே, ஆடம்பர ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளுக்கு ‘வழியனுப்பு விழா’ செய்தார். மக்களைச் சந்தித்தார். ஆட்டையப்போட வரும் பிரமுகர்களைச் சந்திக்க மறுத்தார்.
மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையத்துறை சட்டம். தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் என்று அதிரடியாகவே செயல்பட்டார். ஜமீன்தாரிகளும், மாடாதிபதிகளும் கொதித்தார்கள்.
அதுவரை ஹரிஜன் என்று அழைக்கப்பட்டவர்களை ஆதி திராவிடர்கள் என சட்டமியற்றினார். தொழிலாளர் நலத்துறையோடு இருந்த ஹரிஜன் நலனை பிரித்து, தனியாக ஆதி திராவிடர் நலத்துறை என்றாக்கி, தனி ஆணையரை நியமித்தார். அந்த சமூகத்தவர்களும் கோயிலுக்குள் நுழைய சட்டத்தை இயற்றினார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதி திராவிடர்களுக்கு அனுமதியில்லை. அந்த மக்களும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமெனச் சட்டமியற்றினார். அதோடு நிற்கிவில்லை. திண்டிவனம் தொகுதியின் (ஆதிதிராவிட) சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை திருப்பதி கோயிலின் அறங்காவலராகவே நியமித்தார்.
அதற்கு முன்பும்-இன்று வரையும் அந்த சாதனையை யாரும் செய்யவில்லை. அதைச்சொல்லி ஓட்டு அரசியலும் செய்ததில்லை. அதிரடி புரட்சிதான். விவசாயத் துறையிலும் பெரும் சாதனை.
அவரது சாதனையை பிறகு வந்த எந்த கொம்பனும் செய்திருக்கவில்லை.
அந்த ஆட்டம் இரண்டாண்டுகள் வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் ‘சம்பாதிக்க முடியவில்லையே’ என்போர்கள் சேர்ந்து கட்சிக்குள்ளாகவே சலசலப்பை ஏற்படுத்தினார்கள். பதவி ஏற்புக்கு மூன்று மாதங்கள் வரை மறுத்துவந்த ஓமந்தூரார், அதிருப்தி என்றான அடுத்த நிமிடமே பதவியை விட்டு விலகினார். சில மணி நேரங்களிலேயே அரசு குடியிருப்பை காலிசெய்துவிட்டு ஓமந்தூருக்குப் போய்ச்சேர்ந்தார்..
பிறகு விவசாயம்தான். அதிலும் ஒரு புரட்சியை செய்தார். இராமலிங்க அடிகளார் வழியை ஏற்றார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை ஏற்படுத்தினார். வள்ளலார் குருகுலப்பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழைகள் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தினார். அதுவெல்லாம் இப்போது கல்வி நிறுவனங்களாக உயர்ந்துள்ளது.
பலகோடி மதிப்புள்ள தன் சொத்துக்களை எல்லாம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதி வைக்கவில்லை. இந்து அறநிலையத்துறைக்கோ- மாடாதிபதிகளுக்கோ, பிரபல இந்து கோயில்களுக்கோ எழுதி வைக்கவில்லை.
தமிழகத்தில்,
இந்துத்துவாவின் நேரெதிர் மார்க்கத்தில் உள்ள வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிறுவனத்திற்கே ஒப்படைத்தார்.
காமராஜரைப்போல் இறுதிவரை எளிமையும் நேர்மையுமாகே வாழ்ந்த அந்த மனிதர் 25.8.1970-ல் இயற்கையோடு சேர்ந்துபோனார்.
இங்கு வந்தவன் போனவனுக்கெல்லாம் சிலை. ஊர்சொத்தை குடும்பத் சொத்தாக மாற்றினவனுக்கெல்லாம் சிலை. நேர்மையற்று வாழ்ந்தவனுக்கெல்லாம் சிலை. ஊர்தோறும், நாடுதோறுமே சிலை.
ஆனால் இத்தனை பெரிய சாதனைகளை செய்த ஓமந்தூர ராமசாமி ரெட்டி என்கிற எளிமையான மனிதருக்கு, தூய்மையாளருக்கு தமிழகத்தின் எந்த இடத்திலும் ஒரு சிலை இல்லை, பெரிதாக கொண்டாடவில்லை என்பது வெட்கக்கேடு. மானக்கேடு.
அதிகாரத்தில் இருப்பவர்களிடம் எது எதற்கோ பிச்சை எடுக்கும் சத்தியமூர்த்திபவன்-காங்கிரஸ் தரப்பு, ஓமந்தூராருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கலைஞரிடமோ, ஜெயலலிதாவிடமோ கேட்கவில்லை. போராடவில்லை. வெட்கக்கேடு.
இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கை வரலாற்றைக்கூட சேகரித்து ஒரு ஆவணப்படுத்தவும் கிடையாது. மிகச்சிறந்த சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வரும் மதுரா டிராவல்ஸ் அதிபரான பாலு அவர்கள்தான் சொந்த முயற்சியில் அப்படி ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்தார்.
நல்ல காங்கிரஸ்காரர்கள் யாருக்கேனும் ரோசமிருந்தால்....பால்டாயில் குடிச்சுட்டு...
(ஆதங்கத்தில் எழுதிவிட்டேன். நண்பர்கள் பொருத்தருள்க)
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Comments
Post a Comment