அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.
செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை.
அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை.
பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.
நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை.
இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை.
மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.
ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை.
இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. *நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை.
Comments
Post a Comment