ஒரு ஊரிலே ஒரு கிழவி இருந்தார். அவர் மிகவும் ஏழ்மையான சூழலில் இருப்பவர், அவருக்கு படிப்பறிவும் கிடையாது.
ஆனால், ஊரிலே யாராவது ஆன்மீக பேச்சாளர்கள் அல்லது சொற்பொழிவாளர்கள் பேச வந்தால், என்ன வேலை இருக்கிறதோ இல்லையோ, அந்த வேலையெல்லாம் விட்டு விட்டு, போய் உட்கார்ந்து விடுவாராம், அந்தச் சொற்பொழிவினைக் கேட்பதற்கு, அவருக்கு ஒன்றும் விளங்காது, உட்கார்ந்து சொற்பொழிவு விடிய விடிய கேட்டுவிட்டு காலையிலே வேலைக்கு போவார்,
அவருக்கோ வயலிலே வேலை, அந்த வேலைக்கு உரியவன் இந்த கிழவியை திட்டுவார். இரவெல்லாம் தூங்காமல் நித்திரை விழித்து, இங்கு வந்து வேலை செய்யாமல் இப்படி தூங்கினால் என்ன செய்வது என்று திட்டுவார் .
ஒரு நாள் இதே போல இரவெல்லாம் நித்தரை விழித்து சொற்பொழிவு கேட்டுவிட்டு மறுநாள் காலையிலே வேலைக்கு போகிறார், அன்று அவர் வயலிலே வேலை செய்யும் பொழுது சோர்வாக இருந்தார், அதை கண்ட தோட்டக்காரன் கிழவியை திட்டினார்.
உங்களுக்கு என்ன விளங்குகிறது என்று சொற்பொழிவு கேட்க போகிறீர்.
சரி உங்களுக்கு விளங்குகிறதனால் நேற்று பேச்சாளர் என்ன சொன்னார் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார், அதற்க்கு இந்த கிழவி ரொம்ப நல்லா சொன்னார் என்றார், ரொம்ப நல்ல சொன்னார் என்கிறீர்களே அப்படி என்னதான் சொன்னார் என்றார் தோட்டக்காரர்.
அதை ஏன் கேட்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றாக சொன்னார் என்றார் கிழவி.
தோட்டக்காரருக்கு கோபம் வந்து விட்டது, உங்களால் ஒரு வரி கூட சொல்ல முடியவில்லையா என கேட்க பதிலுக்கு கிழவியும் எல்லாமே நல்லாத்தான் இருந்தது சாமி என்றார்.
பின் தோட்டக்காரர் கேட்டார், அட கிழவி! உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?
ஒரு வரி கூட உங்களால் சொல்ல முடியவில்லை.. ஏன் போய் கூட்டத்தை வீணாக நிரப்புகிறீர்கள். வேறு எங்காவது போய் வேலை பார்க்கலாம் தானே, உங்களுக்குத்தான் தான் அறிவில்லை, படிப்பில்ல்லை, இதை ஏன் வீணாக போய் கேட்டு உங்களுடைய காலத்தையும் வீணாக்கி, அவர்களின் நேரத்தையும் வீணாக்கி, ஏன் இவ்வாறு பயனில்லாத வேலையே செய்கிறீர்கள் என்றார்.
பொதுவாக கிழவிகள் என்றாலே குசும்புக்காரர்கள் தான், அதற்க்கு இந்த கிழவி என்ன செய்தார் தெரியுமா!
அங்கே ஒரு மண் வெட்டி அள்ளுகிற கூடை இருந்தது,
அந்த கூடையில் அப்படியே மண் ஒட்டியபிடி இருந்தது, அந்த தோட்டக்காரனை அழைத்து தம்பி கொஞ்சம் இங்கே வந்து நான் சொல்வதை ஒருமுறை செய்யுங்கள், என்று அவரை கூப்பிட்டு இந்த கூடையிலே அங்கு ஓடும் ஆற்றில் போய் தண்ணி அள்ளி வாருங்கள் என்றார்.
கூடையில் ஆத்து தண்ணிய அள்ள முடியுமோ? தோட்டக்காரர் சிரித்தார் .
பாட்டி உங்க வேலையை என்னையும் பண்ண சொல்றீங்களா. கூடையில தண்ணி அள்ள முடியுமா என்றிளுக்க, அதெல்லாம் பேச வேண்டாம் தம்பி, கூடையிலே கொஞ்சம் தண்ணி அள்ளுங்க என்றார்,
இந்த கிழவி சொல்லுகிறாரே என்று அந்தக் கூடையை ஆற்றிலே போட்டு தண்ணியை தோட்டக்காரர் அள்ளினார்.
கூடையில் தண்ணி நிற்குமா? நிற்க்கவில்லை இன்னொரு முறை அள்ளுங்கள் என்றார் கிழவி, தோட்டக்காரரும் திருப்பி அள்ளினார், இப்பவும் தண்ணீர் நிற்க்கவில்லை, இன்னொரு முறை அவ்வாறே அள்ள சொல்ல மீண்டும் தோட்டக்காரர் முயற்சிக்க தண்ணீர் கூடையில் நிற்க்கவில்ல.
அப்பொழுது கிழவி கேட்டார், கூடையிலே தண்ணீர் நின்றதா என்று, தோட்டக்காரர் 'இல்லை' என்றார்,
ஆனால் கூடையை கவனித்து பார்த்தீர்களா, கூடையில் ஒட்டி இருந்த மண் அழுக்கெல்லாம் சுத்தமாக போய் விட்டது என்றார்.
நீதி:
நல்லவற்றை கேட்கிற பொழுது, அந்த விஷயம் ஞாபகத்தில் நிற்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த நிமிடத்தில் மனம் சுத்தம் ஆகிறதே அதுவே பெரும் பயன்.
நல்லதை கேளுங்கள்
நல்லதை பேசுங்கள் நல்லன அல்லாதவற்றை புறந்தள்ளுங்கள்..
நல்லதை நினையுங்கள்
நல்லதை பாருங்கள்
உங்களுக்கு நடப்பதும் நன்மையாய் மட்டுமே அமையட்டும்
Comments
Post a Comment