02-03-2008
அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..?
தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச் சேர்ந்திருந்தால், உங்களைவிட நானும் சந்தோஷப்படுவேன். ஏனெனில் உங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்.
இங்கிருந்ததைவிட ‘அங்கு’ நன்றாகவே இருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன். ‘புதிய இடம்’ என்பதால் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும். மனம் ஒருநிலைப்படாது..
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், உடன்பிறந்தார், நண்பர்கள், பகைவர்கள் என்று அனைவரையும் தேடும். ஆனால் புறப்பட்ட இடம் அதுதான் என்பது, தாங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் இடம் ஏது?’ என்ற கவியரசின் கருத்துக்கேற்ப, கொடுத்தவனே தங்களை எடுத்துக் கொண்டான்.. அரங்கனடி இணைந்துவிட்டீர்கள். சந்தோஷம்..
உங்களுக்கும், எனக்கும் என்ன ஸார் சம்பந்தம்? நான் யார்? நீங்கள் யார்..? நான் ஏன் நீங்கள் மறுவீடு அடைந்ததற்கு வருந்த வேண்டும்? யோசித்துப் பார்க்கிறேன்..
சுடுகாடுவரையிலும் வந்து உங்களை வழியனுப்பிவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, மீண்டும் வேலைக்காக கிளம்பும்போது தெருவே அல்லோலகப்பட்டுக் கொண்டிருந்தது.
எனது தெருவில் மரத்தோடு மரமாய் தானாகவே வளர்ந்திருந்த ஒரு பெண் நாய், நாலு குட்டிகளை பெத்துப் போட்டுவிட்டு செத்துப் போய்விட்டது அனாதையாக..
தெருவில் இருக்கும் குழந்தைகள் ஆளுக்கொரு குட்டியைக் கையில் தூக்கிக் கொண்டு தங்களது வீடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் பெற்றோர்களுடன் தர்க்கம்..
சின்னப் பிள்ளைகள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ‘இங்கதான் இருக்கும்..’ ‘நான்தான் வைச்சிருப்பேன்’ என்று அழுத்தமான குரல்.. ஒரு பெற்றோராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.. இது என்ன வகையான நட்பு? என்ன வகையான பாசம் என்று..?
குழந்தைகளின் உலகமே தனிதானே ஸார்.. ஒரு நிமிடம் நின்று அந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான உறவுச் சண்டையை நேரில் பார்த்தபோது சட்டென்று எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது..
எழுத்தாளனுக்கும், வாசகனுக்குமான உறவு இது போன்றதுதானே.. அதில் ஒரு உறவுதான் உங்களுக்கும், எனக்குமான உறவு..
நான் பிறந்து வளர்ந்தது முதலே என் வீட்ல புத்தக மூட்டைகள் நிறையே கிடந்தது ஸார்.. அதுல முதல் ஆளா நிக்குறது கல்கி தாத்தாதான் ஸார். அவரோட ‘பொன்னியின் செல்வனையும்’, ‘சிவகாமியின் சபதத்தையும்’ எங்கப்பா கட் பண்ணி பைண்ட் பண்ணி வைச்சிருந்தார். அப்புறம் ஜெயகாந்தன், இந்த ரெண்டே பேர் புஸ்தகம்தான் வீட்ல இருந்தது.. மத்தபடி மாசாமாசாம் எங்கப்பா தவறாம வாங்கின புத்தகம் ‘துக்ளக்’.. நான் பொறந்ததுலேர்ந்து கூடவே வாசிச்சிட்டு வந்திருக்கிற புத்தகம் ‘துக்ளக்’.. அது கிடக்கு விடுங்க..
கொஞ்சம் வயசு ஏற.. ஏற.. கிடைக்கின்ற அனைத்து புத்தகத்தையும் வாசிக்க ஆரம்பிச்சேன்.. அப்போ அதிகமா வீட்டுக்கு வீடு கிடைக்கிற புத்தகம் ‘ராணிமுத்து’தான் ஸார்.. அதுல லஷ்மியம்மா, சிவசங்கரி, அனுராதாரமணன், வாஸந்தி அப்படின்னு ஒரே லேடீஸ் கூட்டமா இருந்தது..
அப்புறம் பக்கத்து வீட்டு ரஞ்சி மதினி வீட்லருந்துதான் ஒரு புத்தகம் கைக்கு கிடைச்சது.. பேரெல்லாம் மறந்து போச்சு ஸார்.. ஆனா எழுதினவரோட பேர் மட்டும் கரெக்ட்டா ஞாபகம் இருக்கு.. ‘சுஜாதா’தான்னு.. நான் நிஜமாவே ‘சுஜாதா’ன்னா யாரோ ஒரு பொம்பளைன்னுதான் ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ஆனா நீங்க ஒரு ஆம்பளைன்னு எங்கக்காதான் சொன்னாங்க..
அப்ப எனக்கு மீசை முளைச்சு, ‘லுக்’ விட அலைஞ்சிட்டிருந்த வயசு.. அப்பத்தான் ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் இவுக ரெண்டு பேரையும் ‘சதக்..’ ‘சதக்..’ கொலைகளுக்காக விழுந்து, விழுந்து படிச்சிட்டிருந்தேன்.. அப்புறம்தான் உங்களோட கணேஷ், வசந்த், மதுமிதா மூணு பேரும் எனக்கு கனவுலேயே வர ஆரம்பிச்சாங்க..
எப்பவும் ஒரு வாக்கியம் எப்படி இருக்கும் என்று நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்து கட்டியிருந்த ஒரு மனக்கோட்டையைத் தகர்த்தெறிவது போல நீங்கள் எழுதியிருந்த, ‘கடைசியிலிருந்து முதலிடத்திற்கு’ என்பது பாணியிலான எழுத்துக்கள் என்னைக் கட்டிப் போட்டுச்சு ஸார்..
அதென்ன ஸார் உங்களுடைய எழுத்து நடை..? கவர்ச்சியான எழுத்து ஸார்.. முதல் வரியிலிருந்து கடைசிவரை படித்தே தீர வேண்டும் என்பது போல் படிக்க வைத்தது உங்களது பாணி.
ஒரு 15 வயது பையனை இப்படியொரு மர்மம் நிறைந்த கதைகளைப் படிக்க வைப்பதில் வெற்றி பெற்ற உங்களது எழுத்துப் பாணியை என்னவென்று சொல்வது..?
யார் வேண்டுமானாலும் எழுதலாம்? ஆனால் யார் அதைப் படிப்பது..?
எழுத்து என்பது வாசகனுக்கும், ஆசிரியனுக்கும் இடையில் உள்ள உறவுப் பாலம்.. அதன் வழியேதான் அவன் மதிப்பிடப்படுகிறான் வாசகனால். அந்த வாசகன்தான் அவனுக்கு முதலாளி.. அப்படித்தான் நீங்கள் எங்களை நினைத்துக் கொண்டீர்கள்.. முதலாளிகளுக்கு என்ன புடிக்குமோ, எதை பிடிக்குமோ அதைக் கொடுப்போம். அவர்கள் நமக்கு என்றைக்குமே முதலாளிகளாகவே இருப்பார்கள் என்பதை சாகின்றவரையிலும் நீங்கள் கடைபிடித்தது உங்களது தனித்தன்மை.
சத்தியமாக எனக்கு ஆண்டாழ், ஆழ்வார் பாசுரங்கள் என்றால் என்ன என்றோ.. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றால் என்ன என்றோ? ஸ்ரீரங்கம் எங்கே இருக்கிறது என்றோ தெரியவே தெரியாது..
ஏறினால் மலைக்கோட்டை, இறங்கினால் மணிக்கூண்டு, இல்லாவிடில் NVGB, சோலைஹால் தியேட்டர் என்றிருந்த எனக்கு திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கின்ற சாமி இருக்கிறது. அந்தச் சாமிக்கு பெருமாள் மீது லவ்வு.. அந்த லவ்வுல பாடின பாட்டுதான் அந்த ஆண்டாள் பாசுரங்கள்ன்றது நிசமா தெரியாது ஸார்..
நீங்கதான் அதை முதல்ல என் கண்ல காட்டினீங்க.. கொலை நாவலாக இருந்தாலும் சரி.. செய்திக் கட்டுரையாக இருந்தாலும் சரி.. ஆண்டாளையும், ஆழ்வார்களையும் அடிக்கடி நீங்கள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியவிதம்தான் என்னைப் போன்ற அநேக இளைஞர்கள் இவற்றைப் பற்றி அறிய முடிந்தது. ஸோ.. நீங்க எனக்கு வாத்தியார்தான்.. இந்த இடத்திலிருந்து ‘வாத்தியார்’னே உங்களைக் கூப்பிடுறேன்..
அப்பத்தான் வாத்தியாரே திடீர்ன்னு ஒரு சினிமா வந்துச்சு.. ‘விக்ரம்’னு பேரு.. அதுல ஒரு காட்சி.. கமலும், சாருஹாசனும் பேசிக்கிட்டிருப்பாங்க.. அப்போது T.S.ராகவேந்தர் ஒரு டிரேயில் காபி கொண்டு வருவார். “ஸார் காபி..” என்று சொல்வார். கமல் “யெஸ்..” என்று சொல்லிவிட்டு சாருஹாசனுடன் பேச்சைத் தொடர்வார். தொடர்ந்து ராகவேந்தர், “ஸார் சுகர்..” என்பார். கமல் பேச்சை நிறுத்திவிட்டு, “two spoons” என்பார். உடனே ராகவேந்தர் ஜீனியை, இரண்டு ஸ்பூன் எடுத்து காபியில் கலக்குவார். இந்தக் காட்சி என்ன காரணத்தாலோ என் மனதில் வருடக் கணக்காக பதிஞ்சிருச்சு வாத்தியாரே.. என்னன்னே தெரியல..
படம் பார்த்து முடிஞ்சப்புறம் வீட்டுக்குப் போயி இன்னிக்கோ, நாளைக்கோ என்ற நிலையில் இருந்த எனது அப்பாவிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.. அவர்தான் சொன்னார் “சர்க்கரை வியாதின்னு ஒரு வியாதி இருக்கு. அது இருக்கறவங்க சர்க்கரை அதிகம் சாப்பிடக்கூடாது. அதுனால காபில சர்க்கரையை கொஞ்சமா போட்டு சாப்பிடுவாங்க.. அதுக்காக கேட்டிருப்பாங்க..” என்று மூச்சு இழுத்துப் பிடித்துச் சொன்னவர், அப்புறம் கேட்டார்.. “இதையெல்லாமா சினிமால சொல்லித் தர்றாங்க..” என்றார்.
உண்மைதான் வாத்தியாரே.. அம்பிகாவுடனான பாடல் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், டிம்பிள் கபாடியாவின் அழகு காட்சிகள்.. இனிமையான பாடல்கள், சூப்பரான திரைக்கதை.. இதையெல்லாம் தாண்டி அந்த ஒரு ஷாட் மட்டும் என் மனசுக்குள்ள எதுக்கு உள்ள வந்து உக்காந்ததுன்னே தெரியல வாத்தியாரே.. ஆனா அதுக்கப்புறம்தான் எனக்கு உன்னை ரொம்பவே புடிச்சுப் போச்சு..
விரட்டி விரட்டிப் படிச்சேன் உன்னோட எழுத்துக்களை.. ஒரு புத்தகத்தை கைல எடுத்தா கீழ வைக்க முடியல.. படிச்சு முடிச்சிட்டுத்தான் மறுவேலைன்னு சின்ன வயசுல பஞ்சு மிட்டாயை சாப்பிட்டே ஆகணும்னு வெறி வரும் பாரு.. அப்படியொரு உத்வேகத்தையும், உற்சாகத்தையும், வெறியையும் கொடுத்தது உன் எழுத்து வாத்தியாரே.
கதை எங்கே ஆரம்பிச்சு எங்க போய்க்கிட்டிருந்தாலும் இடைல, இடைல தமிழ் இலக்கியங்களையும் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து விடுவ பாரு. அங்கனதான் இன்னிக்கு உனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்ட தம்பிகள் எல்லாம் உன்னை நினைச்சுப் பாக்குறாங்க..
நம் மனதுக்குள் ஆழமாக நேசிக்கும் ஒருவரை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் பிரமிப்பு இருக்கிறதே, அது உன்னை நேரில் பார்த்தபோது எனக்கு மறக்காமல் கிடைத்தது வாத்தியாரே…
நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வேலை பார்த்துக்கிட்டிருக்கும்போது ஸ்பெஷல் இஷ்யூவுக்காக உன்கிட்ட மேட்டர் கேட்டிருந்திருக்காங்க.. நேர்ல வந்து வாங்கிக்கச் சொல்லிட்ட.. எங்க ஆபீஸ்ல என்னை போகச் சொன்னாங்க.. அப்போ நீ ஆழ்வார்பேட்டைல குடியிருந்த வாத்தியாரே.
ஒரு காலை நேரம்.. 11 மணி இருக்கும்.. வீட்டுக்கு வந்தேன்.. அங்கேதான் முதன் முதலா வாத்தியாரான உன்னை பார்த்தேன்.. என் தோற்றம் எலும்புருக்கி நோய் வந்தவனைப் போல் அப்போது எனக்கே தெரிந்தது. ஆனால் நீ என்ன நினைச்சன்னு எனக்குத் தெரியாது.. ஆனா பார்த்தவுடனே, “வாங்க..” என்றாய்.. அதுதான் வாத்தியாரே மரியாதை.. நான் நினைக்கலியே.. இப்படியொரு மரியாதை கொடுப்பன்னு.. திகைச்சுப் போய் நின்னேன்..
பள்ளி முடிந்து வாசலுக்கு வரும் குழந்தை தினம் தினம் பார்க்கும் அதே அம்மாவை பார்த்தவுடன் திடீர் குதூகுலத்துடன் ஓடி வருமே.. அப்படியொரு சந்தோஷம் எனக்கு.. மேற்கொண்டு ஒரு பேச்சும் இல்லாம நம்ம சந்திப்பு முடிஞ்சது அன்னிக்கு..
மறுநாள் திரும்பவும் டைப் பண்ணினதை எடிட் பண்ணி வாங்குறதுக்காக வந்தேன்.. நியூட்டனின் நான்காவது விதியை நானே கண்டுபிடிச்ச மாதிரி ஒரு சந்தோஷத்துல உன்கிட்ட சொன்னேன்.. “நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஸார்..” என்றேன்.. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்த நீ நிமிர்ந்து பார்த்து சிரிச்ச.. உன் வீட்டுக்காரம்மாவும் சிரிச்சாங்க..
“இப்பத்தான் இந்த கீபோர்ட்ல டைப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஸ்பீடா அடிக்கிறேன்.. தப்பு வரத்தான் செய்யும். திருத்தம் செய்ய எனக்கு நேரமில்ல. அதான் ப்ரூப் ரீடர் இருக்காங்கள்ல..” என்றாய்.. “அதுவும் நான்தான் ஸார்..” என்றேன்.. “அப்ப உனக்கு வேலை கொடுக்கணும்ல்ல..” என்று இருபொருள்பட சொன்ன வாத்தியாரே.. ஆனா நான்தான் டியூப் லைட்டாச்சே.. புரியல.. சிரித்துக் கொண்டேன்..
எடிட் செய்து கொடுத்துவிட்டு, “பக்கம் பத்தலைன்னா சுதாங்கனையே குறைச்சுக்கச் சொல்லுங்க.. நோ பிராப்ளம்..” என்று சிம்பிளாகச் சொன்னாய்.. முதல் சந்திப்பைவிட இரண்டாவது சந்திப்பு எனக்கு மிக ருசிகரமாக இருந்தது. கள்ளமில்லா சிரிப்புய்யா உமக்கு..
இந்த சந்திப்புக்கு பிறகு அந்த ஸ்பெஷல் எடிஷனை கொடுப்பதற்காக மூன்றாவது முறையாக வீட்டுக்கு வந்தேன். “சரவண..ன்..” என்று அழுத்தம் கொடுத்து கூப்பிட்டாய்.. மேற்கொண்டு என்ன பேசுவது என்பது தெரியாமல் நின்றேன்.. புத்தகத்தை வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ்..” என்று சொல்லி சிரித்தாய்.. எவ்வளவு நேரம் அப்படியே நிற்பது..? ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு அப்படியே திரும்பினேன்.. அப்பொழுது தெரியவில்லை.. மீண்டும் உன்னைச் சந்திக்க வருடங்களாகும் என்று..
காலத்தின் போக்கில் நான் அடிபட ஆரம்பித்த முதல் வருடம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகா தியேட்டரில் ‘STEP MOM’ படம் பார்க்க ஒரு ஈவினிங் ஷோவிற்கு வந்தேன்.. நீ, சுஜாதா அம்மாவோடு வந்திருந்தாய்.. அப்போதுதான் நீ நடந்து பார்த்து எனக்குள் லேசான அதிர்ச்சி வந்திருந்தது.. முதுகில் லேசான கூன் விழுந்ததைப் போல் குனிந்து நடந்து வந்திருந்தாய். உன் மீது முதல் வருத்தம் எனக்குள் ஏற்பட்டது அங்குதான்.
நான்காவது முறையாக சந்திப்பு அங்கே.. தமிழ் டைப்பிங் பற்றி எனது சந்தேகத்தை கேட்டேன்.. “INSCRIPT Method-லாம் ரொம்ப நாளைக்கு இருக்காது.. நீ பேசாம டைப்ரட்டிங் மெத்தேடுக்கு மாறிக்க.. இல்லேன்னே பின்னாடி ரொம்ப பிரச்சினையாகும்.” என்று அன்பான அறிவுரை கொடுத்த வாத்தியாரே.. கூடவே ‘நீ..’ ‘வா..’ என்று ஒருமையில் அழைத்தாயே.. அப்போதைக்கு படம் பார்த்த திருப்தி தியேட்டர் வாசலிலேயே எனக்குக் கிடைத்தது.
சில மாதங்கள் கழித்து திரைப்பட இயக்குநர் ஒருவர், பெண்டசாப்ட் நிறுவனத்திற்காக ஒரு கதையைக் கொடுக்க வேண்டி என்னிடம் டைப்பிங் செய்ய வந்தார். நானும் டைப்பிங் செய்து கொடுத்தேன். ஆனால் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்ததால் பெண்டசாப்ட் நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
அங்கே நமது ஐந்தாவது சந்திப்பு. எனது எழுத்துரு Fonts Directory-யில் Copy ஆகவேயில்லை.. கடும் போராட்டம். சலித்துப் போய் உனது அலுவலக ஊழியர் உன்னிடம் வந்து சொன்ன பிறகு எழுந்து வெளியே வந்தாய். அப்போதுதான் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன், “சரவண..ன்…” என்று அழுத்திச் சொன்னாய்.. உன்னை நினைக்கும் போதெல்லாம் அந்த உச்சரிப்பு இன்னமும் என் காதில் ஒலிக்கிறதய்யா..
“அதே inscript-ஆ.? இன்னும் மாத்தலையா நீ..?” என்று அக்கறையாக விசாரித்துவிட்டு “சரவணன் அடிச்சதுல நான் திருத்தம் பண்ண முடியாது.. வேண்ணா வேற font செலக்ட் பண்ணித்தான் அடிக்கணும்.. விட்ரு.. நான் பாத்துக்குறேன்..” என்று சொல்லி என்னைக் காப்பாத்தின வாத்தியாரே.. அடிச்சுக் கொடுத்த காசு கைல வருமா என்ற குழப்பத்துல இருந்தேன்.. நீயும் எனக்குத் தெரிஞ்சவன்றது தெரிஞ்சு, கீழ இறங்கும்போது லிப்ட்லேயே முழு பணமும் என் கைல கிடைச்சிருச்சு சாமி.. தேங்க்ஸ்..
அப்புறமும் விடாம என் வாழ்க்கைல நடந்த ‘பரமபத’ விளையாட்டுல மேல போயி, கீழ இறங்கி ஓடிக்கிட்டிருக்கும்போது எங்காவது பங்ஷன்ல பார்க்கும்போதெல்லாம் கை குலுக்கி “சரவண..ன்..” அப்படீன்னு உச்சரிச்சுட்டுப் போவ பாரு.. அந்த ஒரு வார்த்தையே போதும்டா சாமின்னுதான் இருந்தேன்..
‘கலைஞர் அரங்கத்துல’ நடந்த ஒரு நூல் வெளியிட்டு விழால சந்திச்சேன்..
“இப்ப என்ன பண்றே?”ன்னு கேட்ட வாத்தியாரே.. “வீட்டுக்கு வீடு லூட்டி’ எழுதிக்கிட்டிருக்கேன் ஸார்”ன்னேன்.. “மூணு பேர்ல எழுதறாங்க..?” என்றாய். “ஆமா ஸார்ன்னேன்..” என்னை முழுசா பார்த்து சிரிச்சிட்டு, “வயசானவங்கதான் எழுதறாங்கன்னு நினைச்சேன்”னு சொல்லி, இன்னொரு தடவையும் சிரிச்ச.. அப்புறம் கையை அழுத்திவிட்டுப் போன ஆளு, கொஞ்சம் நின்னு, “அந்த ஐயர் பேமிலி யார் எழுதுறா..?”ன்னு கேட்ட.. “நான்தான் ஸார்ன்னு..” சந்தோஷமா சொன்னேன்.. அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிச்ச பாரு.. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு அப்பத் தெரியல வாத்தியாரே.. “கற்றதும் பெற்றதும் படிக்கிறியா…?”ன்னு கேட்டப்ப எனக்கு எதுக்கு கேக்குறன்னு தெரியாம போயிருச்சு.. “படிச்சிட்டுத்தான் ஸார் இருக்கேன்னேன்..” “குட்..”னு தட்டிக் கொடுத்திட்டு போயிட்ட..
ஒரே பிரமிப்பா இருந்துச்சு வாத்தியாரே.. ஏன்னா, சுத்தி நிக்குற அத்தனை பேரும் என்னையவே பார்க்கும்போது எம்புட்டு பெருமையா இருந்தது தெரியுமா? ஆனா நீ எதுக்கு, “கற்றதும் பெற்றதும் படிக்கிறியா?”ன்னு கேட்டன்றது மறுநாள் ஆபீஸ் போனப்புறம்தான் தெரிஞ்சது.. ‘கற்றதும் பெற்றதும்’ல ‘வீட்டுக்கு வீடு லூட்டி’யை பத்தி எழுதியிருக்குற.. அதை எங்க ஆபீஸ் நோட்டீஸ் போர்டுல ஒட்டி வைச்சிருந்தாங்க.. அதைப் பார்த்த பின்னாடிதான் தெரிஞ்சது “ஆஹா வாத்தியாரு.. குறிப்பாத்தான் சொல்லிருக்காருன்னு..”
கடைசியா போன வருஷம் சில முறைகள் உன்னை, புக்பாயிண்ட் புத்தகக் கடை, புத்தகக் கண்காட்சி, பிலிம் சேம்பர் தியேட்டர்ன்னு சந்திச்சாலும் வெறுமனே கை குலுக்கிட்டு போயிட்ட.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. ஒரு வேளை மறந்து போச்சோன்னு நினைச்சு நானே தேத்திக்கிட்டேன்..
இப்ப பிளாக்ல எழுதறதையாவது உன்கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கலாம் நினைச்சப்போ, பிளாக் பத்தி நீ கொடுத்த பேட்டி ஒண்ணு என் கண்ணுல பட்டுச்சு.. “பிளாக் ரொம்ப போர்.. வளவளன்னு எழுதுறாங்க..” அப்படீன்னு உன் கமெண்ட்டை பார்த்தவுடனேயே எனக்குத் திக்குன்னு ஆயிருச்சு..
எங்க, என்னோட பதிவைப் படிச்சிட்டுத்தான் உனக்கு அப்படியொரு எண்ணம் வந்துச்சோன்னு எனக்குத் திகிலாயிருச்சு.. அப்படியே ஒதுங்கிட்டேன்..
இடையில நான் எடுத்த ‘புனிதப்போர்’ என்ற குறும்படத்தை உனக்கு போஸ்ட்ல அனுப்பி வைச்சேன். கிடைச்சுச்சா, இல்லையான்னு எனக்குத் தெரியல.. ஆனா அதுக்குள்ள உனக்கு உடல்நிலை சரியில்லைன்னு கேள்விப்பட்டு மனசு ரொம்ப வருத்தமாயிருச்சு.. ‘சிவாஜி’ பட பங்ஷன்ல உன்னை டிவில பார்த்தேன்.. அதான் கடைசியா பார்த்தது.
பிளாக்ல உன்னோட வளர்ப்புப் பிள்ளை தேசிகன், “ஸாருக்கு உடல்நிலை சரியில்லாமப் போய் இப்ப வீட்டுக்கு வந்துட்டாரு..”ன்னு ஒரு பிட் போட்டாரா..? அதைப் படிச்சிட்டு மனசே கேக்கலை.. “சரி போய்தான் பார்ப்போம்”னுட்டு ஒரு நாள் சாயந்தரம் 5 மணி வாக்குல உன் வீட்டுக்கு வந்தேன்.
ஆனா உன் வீட்ல நிறைய கெஸ்ட் இருந்தாங்க.. “ஸார்.. ரெஸ்ட்ல இருக்காருப்பா.. இப்ப வேணாமேன்னு..” ஒரு அம்மா வந்து சொன்னாங்க.. எனக்கும் உன்னை கஷ்டப்படுத்த இஷ்டமில்லை.. அப்படியே திரும்பிட்டேன் வாத்தியாரே..
ராத்திரி பத்து மணிக்கு ஒரு பங்ஷன்ல இருக்கும்போதுதான் நீ மிகவும் விரும்பிய ‘அரங்கநாதன் காலடியைச் சரணடைந்துவிட்டாய்’னு நியூஸ் கிடைச்சது.. ஒரு செகண்ட் ஆடிட்டேன் வாத்தியாரே.. அப்ப எனக்கு மட்டுமில்ல.. நியூஸ் கேள்விப்பட்ட அத்தனை பேருக்குமே நீ வயசானவன்ற உணர்வே முதல்ல வரலே.. அப்புறம்தான் 73 வயசாச்சே அப்படீன்ற யோசனையே வந்துச்சு.. இங்கதான் வாத்தியாரே நீ ஜெயிச்சிட்டே.
நீ வயதானவன் என்ற எண்ணம்கூட
வராமல் தடுக்கும் அளவுக்கு, நீ எங்களை வளர்த்து வைச்சிருந்திருக்க..
இதுதான் உன் எழுத்தினால் உனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது வாத்தியாரே.
கழுத்தில்
ஒரேயொரு மாலையோடு கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமின்றி படுத்துறங்கிக்
கொண்டிருந்த, நீ இறந்து போய்விட்டதாக அனைவருமே சொன்னார்கள்.
வாழ்நாளெல்லாம் தனது பெயரை உனக்களித்து ஓருடலாக வாழ்ந்த சுஜாதாம்மா, அவ்வப்போது வருகின்ற உறவினர்களுடன் கை குலுக்கி குலுங்கிய போதுதான் அது மரணம் நிகழ்ந்த வீடு என்பதாகத் தெரிந்தது.
நீ விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்ட சினிமாத் துறையினரும், உன்னுடைய தாய் வீடான எழுத்துத் துறையினரும் திரண்டு வந்திருந்தார்கள்.
கலைஞர், வைரமுத்து, கனிமொழியோடு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அடுத்து உமது செல்ல மருமகன் கமல்ஹாசன் வந்தார். அஞ்சலி செலுத்திய கையோடு திகைத்துப் போய் நின்றார். அநேகமாக உன்னைப் பார்க்க வந்து பேச முடியாமல் போனது அவருக்கு அதுதான் முதல் முறை என்பதால் கொஞ்சம் திணறித்தான் போனார்.
‘இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்!’ என்ற கவியரசர் கண்ணதாசனி¢ன் வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் செயலில் நீ கடைசிக் காலத்தில் ஈடுபட்டாய் என்பதைத்தான் கமலஹாசன் தனது அஞ்சலியில் குறிப்பிட்டார்.
இயக்குநர் வஸந்த் நீ மருத்துவனையில் இருந்த நாளிலிருந்து உன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.. பிரபலங்கள் அனைவரும் அவரிடம்தான் உன் கடைசிக் கால நினைவுகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
உனது செல்லப் பிள்ளையாக இருந்த எங்களது வலையுலக நண்பர் தேசிகன்.. பாவம்.. அழுது, அழுது பேசக்கூட முடியாத நிலையில் இருந்தார்.
உன் பிள்ளைகளில் இரண்டாவது பையன் ரங்கபிரசாத்துதான் தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தார். ‘எப்போதும் கடைசி பிள்ளைதான் பெற்றோரோடு ஒட்டுதலாக இருக்கும்’ என்று நீதானே எழுதியிருந்தாய்..
நடக்க முடியாத நிலையில் இருந்த உன்னுடைய தம்பி ராஜகோபாலை ‘ஒரு வாய் பாலாவாது குடியுங்கள்’ என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். அவ்வளவு சோர்ந்து போயிருந்தார்.
நீ வளர்த்து ஆளாக்கிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், இடிந்து போய்விட்ட நிலையில் காணப்பட்டார்.
உனது நாடகத் துறை நண்பர், பூர்ணம் விசுவநாதன் நடக்க முடியாத நிலையிலும் வந்து அஞ்சலி செலுத்தினார்.
என்னுடைய இன்னொரு ‘பாலபாட’ வாத்தியார் பாலகுமாரன், தனது மனைவியுடன் வந்திருந்து கடைசி வரையிலும் இருந்தார் வாத்தியாரே..
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியாரே. அனந்து ஸார் இறந்தப்ப, அவர் வீட்டில் உனக்கு ஒரு அனுபவம் கிடைத்ததே.. ஞாபகம் இருக்கிறதா..? அதேதான் உன் வீட்லேயும் அன்னிக்கு நடந்தது.
மதன், சாருநிவேதிதா, ராவ்.. என்று உன்னுடைய தோஸ்துகளுடன் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்க.. பாதிக் கூட்டம் அவர்களையே மொய்த்தது. ‘தொல்லையடா சாமி’ என்று கமல் உடனேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.
உன் மனைவிக்குப் பிறகு சாருஹாசனின் மனைவிதான் நான் பார்த்து பெரிதும் அழுது கலவரப்பட்டார்.
மணிரத்னம், “நீயும் கஷ்டப்படாம, அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தாம நீ சீக்கிரமா மேல போனது சந்தோஷம்” என்பது போல் சிரித்தபடியே உனக்கு அஞ்சலி செலுத்தினார். சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது எனக்குத் தெரிந்து வாஜ்பாய்க்கு பிறகு இவர்தான்.. ஆனாலும் மரணத்தை அவரும் அருகில் பார்த்தவர்தான். டேக் இட் ஈஸி பாலிஸிக்காரர்தானே..
இயக்குநர் பாலுமகேந்திரா உன்னைப் பார்த்ததுமே கதறி அழுதாரே பார்க்கணும்.. நிஜமாகவே அவர் உணர்ச்சிமயமானவர் என்பது அன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது.
சிவகுமார் மகன் கார்த்தியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், இயக்குநர் சித்ரா லஷ்மணன், ராஜீவ்மேனன், கவிஞர் மு.மேத்தா, அஜயன் பாலா என்று எனக்குத் தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.
இந்த நேரத்திலும் உன் வீட்டில் ஒரு காமெடி நடந்தது வாத்தியாரே..
‘கஜினி’ படத்தின் இயக்குநர் முருகதாஸ் உனக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். வந்தவேகத்தில் அவரைச் சூழ்ந்து கொண்ட சில போலீஸார், அவரை வலுக்கட்டாயமாக தங்களது காருக்குள் திணிக்கப் போக.. மனிதர் பெரும்பாடுபட்டு கூச்சல் போட ஆரம்பித்தார். ஆனாலும் கார் கிளம்பிச் சென்றுவிட்டது.
பரபரப்பு கூடி.. வந்தவர்கள் சேலத்திலிருந்து வந்திருந்த போலீஸார் என்பது தெரிந்து டென்ஷனானார்கள் லோக்கல் போலீஸார்.. அதே நேரம் வாசலில் நின்றிருந்த திரைப்படத் துறையின் இரண்டு ‘கிரகங்கள்’, கொதித்துப் போய் போன்களை சுழற்ற.. சென்னையைக் கடப்பதற்குள் முருகதாஸ் விடுவிக்கப்பட்டு பின்னர், மீண்டும் கடைசி நேரத்தில் உனக்கு அஞ்சலி செலுத்த வந்தார். செத்தும் ஒருத்தருக்கு உதவி பண்ணியிருக்கிற வாத்தியாரே.
திருமாவளவன் திடீரென்று வந்து பரபரப்பைக் கூட்டினார் வாத்தியாரே. ஒண்ணும் புரியல.. அதன் பின்னர் வைகோவும்,கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் வந்து சென்றார்கள்.
தன் மனைவியுடன் வந்திருந்த இயக்குநர் ஷங்கர், உன் மகன்களுடன் நீண்ட நேரம் பேசி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘நக்கீரன்’ கோபால் வந்திருந்து நீண்ட நேரம் இருந்து, “இவரை மாதிரி யார் ஸார் இனிமே இருக்கா..? அவ்வளவுதான் போச்சு. போச்சு..” என்று பாலகுமாரனிடம் கண் கலங்கிச் சொல்லிவிட்டுப் போனார்.
ஸ்டெர்லிங் சிவசங்கரன், பெண்டசாப்ட், ப.சிதம்பரம் என்று பெயர் போட்ட மலர் வளையங்களை உன் கண்ணாடிப் பேழையின் அடியில் பார்த்தேன்.
‘ஆனந்த விகடன்’ எஸ்.பாலசுப்பிரமணியன், நீண்ட நேரம் உன் சடலத்தின் அருகே நின்று உன் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்.
பார்த்திபன் ஒரேயொரு ரோஜாப்பூவை வைத்து வணங்கினார். அதோடு கடைசி வரையிலும் உன்னோடு இருந்தார் வாத்தியாரே..
ரஜினி மின்னல் வேகத்தில் வந்தார்.. பார்த்தார். கை கூப்பினார்.. வணங்கினார்.. ஆறுதல் சொன்னார்.. பின் அதே வேகத்தில் வெளியேறினார்.. டிவிக்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு அவர் பின்னால் ஓடி கிட்டத்தட்ட சட்டையைப் பிடிக்காத குறையாக நிறுத்திதான் பேட்டியெடுத்தார்கள்.
ஆனாலும் பார் வாத்தியாரே.. எந்தச் சேனலும் உன் சாவைக் கண்டுக்கவே இல்லை.. ஏதோ போனா போகுதேன்னு 1 நிமிஷம் ஓட்டுனாங்க.. என்னன்னே தெரியலே..
பேட்டி எடுக்கும்போதும் நிறைய காமெடிகள் நடந்தது.. மணிரத்னத்திடம் பேட்டி எடுக்க அவரைச் சுற்றி சுற்றி வந்தார்கள். ம்ஹ¤ம்.. மனைவியின் பக்கத்தில் போய் லேசாக கண் ஜாடைகாட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார் மனிதர்.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் பேட்டி எடுத்த டிவிக்காரர்கள், அதன் பின்பு வந்த பழம் பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசனை நிற்க வைத்துவிட்டு, பின்பு ஏனோ கண்டுகொள்ளாமல்.. கிட்டத்தட்ட அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள். மனிதர் இனி எந்த டிவிக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
கடைசி நேரத்தில்தான் பாரதிராஜா வந்தார். கவிஞர் தாமரை தன் கணவர், பையனோடு வந்து அஞ்சலி செலுத்தினார். எழுத்தாளர் இந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கவர்த்தி, கவிஞர் ரவிசுப்பிரமணியம் ஆகியோரை பார்த்தேன். நடிகர் விவேக் வந்திருந்து, காத்திருந்து உன்னைப் பார்த்துவிட்டுப் போனார்.
ஒரு சின்னப் பிரச்சினை காரணமாக மூன்றாண்டுகளாக பேசிக் கொள்ளாமலேயே இருந்த இயக்குநர் வசந்தும், பார்த்திபனும் இன்றைக்குத்தான் உன்னை வைத்து, உனக்காகவே பேசிக் கொண்டார்கள். இந்தமட்டுக்கும் உனக்கு இன்னொரு தேங்க்ஸ் வாத்தியாரே..
உன்னால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளான பத்திரிகையாளர்கள் பெருமளவில் கூடியிருந்து வழியனுப்ப.. உனது ஊர்வலம் துவங்கியது வாத்தியாரே.. இந்த நேரத்தில் உன் குடும்பத்தினரோடு, சேர்ந்து பெரும் குரலெடுத்து கதறி அழுதார் உன் தோஸ்த்து மதன்.
கனிமொழி காலையில் வந்ததிலிருந்து உன்னைத் தூக்குகின்றவரையிலும் அங்கேயேதான் இருந்தார். அவர் இருந்ததாலோ என்னவோ உனக்கு கொஞ்சம் ராஜ மரியாதையும் கிடைத்தது வாத்தியாரே.. என்ன போலீஸ் மரியாதை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லையே தவிர.. உன்னைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றபோது, உனக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் கார் அணிவகுப்புடன் வழியில் ஒரு தடங்கலும் இல்லாமல் இடுகாட்டிற்கு சென்றடைந்தாய்.. இதற்காக கனிமொழிக்கு உன் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சுடுகாட்டிற்கு பாரதியைத் தூக்கிச் சென்றபோது எண்ணி 8 பேர் வந்தார்கள் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள். உனக்கு எத்தனை பேர் என்று பார்த்தேன்.. சுமாராக 50 பேராவது இருக்கும்.. இதுவரைக்கும் சந்தோஷம்தான் வாத்தியாரே..
சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனும், எஸ்.வி.சேகரும் அங்கே திடீரென்று பிரசன்னமானார்கள்.
இடுகாட்டில் மேடையில் உன்னைக் கிடத்தி உனது குடும்ப ஆச்சாரமான சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு, “இப்ப யார் வேண்ணாலும் வந்து வாய்க்கரிசி போடலாம்”னு சொன்னதை, நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே வாத்தியாரே..
இங்கேயும் உன்னோட தோஸ்த்து பாலகுமாரன், ‘வாய்க்கரிசி போடுவதற்கும் ஒரு முறை இருக்கிறது’ என்று செய்து காட்டினார். அவரும் அவரது மனைவியும் அவ்வாறு செய்து, பின் வந்தவர்கள் அனைவரும் அதே போல் செய்தார்கள்.
என்னோட அப்பா, அம்மா, அக்கா.. இவுக மூணு பேரைத் தவிர நாலாவதா உனக்குத்தான் வாத்தியாரே வாய்க்கரிசி போட்டிருக்கேன்.. உனக்கு இப்படியொரு பதில் மரியாதை செய்ய வாய்ப்புக் கிடைக்கும்னு நான் கனவுலகூட நினைக்கலே வாத்தியாரே.. அந்த அரங்கனுக்கும், என் அப்பன் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..
உன்னைச் சுத்தி வரும்போதுதான் கவனிச்சேன்.. எத்தனையோ பேருக்கு அறிவூட்டிய, தமிழுக்குப் பெருமை சேர்த்த அந்தக் கைல, குளுக்கோஸ் ஏத்த பல இடத்துல ஊசியால குத்தி, குத்தி… இடது கையோட மணிக்கட்டுப் பகுதி முழுக்க வீங்கிப் போய் ரணகளமா இருந்ததைப் பார்த்து, அந்த ஒரு செகண்ட்லதான் வாத்தியாரே, என் கண்ணுல தண்ணி பொங்கிருச்சு..
என்ன இருந்தாலும் உனக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது வாத்தியாரே.. எவ்வளவு முறை வாயார வாழ்த்திருப்ப அந்த அரங்கநாதனை.. எத்தனை தடவை புகழ்ந்து எழுதியிருப்ப அவனைப் பத்தி.. இந்தத் தள்ளாத வயசுலேயும் ஸ்ரீரங்கம் போய் பார்த்துட்டு வந்தியே.. அரங்கநாதன், ஏன் உனக்கு இப்படியொரு இம்சையைக் கொடுத்தான்னு தெரியல சாமி..
இந்த மட்டுக்கும் நீ ‘கிளம்பினது’கூட சரிதான்னு எனக்குத் தோணுச்சு.. தப்பா நினைச்சுக்காத வாத்தியாரே..
உன் நெஞ்சில் எருவாட்டி வைத்து அதன் மேல் கற்பூரத்தை கிடத்தி, நெய் ஊற்றி உனது வாரிசு வைத்த நெருப்போடு உன்னைத் தூக்கித் தகன மேடைக்கு கொண்டு வந்து கிடத்தி.. உனது பிதாவான ‘கோவிந்தா.. கோவிந்தா’ என்ற கூப்பாடோடு ‘சாவிற்கும் நவீனம்’ என்று ஒரு காலத்தில் எழுதினாயே, அதே தகன இயந்திரம், இரு புறமும் தகதகவென எரிந்து கொண்டிருந்த கிட்டங்கிக்குள் உன்னைத் தனக்குள் அழைத்துக் கொண்டது வாத்தியாரே..
வந்த கடமை முடிந்து நீ கிளம்பிவிட்டாய்.. கொண்டு வந்த கடமை முடிந்தது என்று நாங்களும் கனத்த மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்..
ஆனால் ஒன்று உண்மை வாத்தியாரே.. ‘நீ யாரை விரும்புறியோ.. யாரை பார்க்கணும்னு நினைக்கிறியோ.. யார் மாதிரி வரணும்னு நினைக்கிறியோ.. அதை நினைச்சுக்கிட்டே இரு.. நிச்சயம் வந்தே தீருவ.. பார்த்தே தீருவ.. அடைஞ்சே தீருவ..’ன்னு யாரோ ஒருத்தர் சொன்னதா, எதுலயோ படிச்சேன் வாத்தியாரே.. அதை அன்னிக்கு நிசமாவே உணர்ந்தேன் வாத்தியாரே.
உன்னை மாதிரி தமிழ்ல யார் எழுதியிருக்கா வாத்தியாரே..? நீயே சொல்லு..
ஆழ்வார் பாசுரத்தையும் எழுதுன.. அண்டவெளியையும் எழுதுன.. ஆண்டாள் பத்தியும் எழுதுன.. அலெக்ஸாண்டரையும் எழுதுன.. காஸ்மிக் கதிர் பத்தியும் எழுதுன.. கேலக்ஸியை பத்தியும் எழுதின.. குவாண்ட்டம் தியரியையும் எழுதின.. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை பத்தியும் எழுதுன.. திருக்குறளுக்கு உரை எழுதின.. புறநானூற்றுக்கு உரை எழுதுன. கொக்கோகத்தையும் அறிமுகப்படுத்துன.. குற்றாலக் குறவஞ்சியையும் எடுத்துச் சொன்ன.. கம்ப்யூட்டர் பத்தி எளிய தமிழ்ல அறிமுகம் செஞ்ச.. ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்துன.. லேட்டஸ்ட்டா ‘சொடுக்கு’ன்ற குறுக்கெழுத்துப் போட்டியை பத்திக்கூட எழுதுன.. சினிமா எழுதுன.. அதுல வேகாத சினிமா எது? வெந்த சினிமா எதுன்னு எங்களுக்குப் புரிய வைச்ச..? நீ எதைப் பத்திதான் எழுதல வாத்தியாரே.. நீ தொட்ட சப்ஜெக்ட்களையெல்லாம் வேற யாரு முழுசா தொட்டிருக்கா சொல்லு..
உன்னோட ‘ஏன் எதற்கு எப்படி?’ ‘தலைமைச் செயலகம்’, கம்ப்யூட்டர் பத்தின புக்ஸ்.. இது எல்லாமே தமிழ் பேசக்கூடிய அத்தனை பேர் வீட்லேயும் வருங்காலத்துல நிச்சயமா இருக்கும் வாத்தியாரே..
எந்தக் கொம்பனோ, வம்பனோ.. உன்னைப் புறக்கணிச்சுட்டு அவனோட பேரப் புள்ளைகளுக்கு தமிழ்ல எந்த பொது அறிவையும் சொல்லிக் கொடுத்திர முடியாது வாத்தியாரே..
நீ தமிழுக்கு தவிர்க்க முடியாத தரு.. நவீன தமிழின் முதல் அடையாளமே நீதான்.. நீதான் இன்றைய இளைஞர்கள் அத்தனை பேருக்கும் ஆசானா, தூண்டுகோலா இருந்திருக்குற..
இன்றைய இளைஞர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு என்ன பண்ணணுமோ, எப்படிச் செய்யணுமோ.. அதைச் செய்து உனக்கு தங்களோட நன்றிக் கடனை செலுத்திட்டாங்க வாத்தியாரே..
அதுதான் இந்த வலையுலகத்திலேயே கணக்கு, வழக்கில்லாமல் பலரும் உனக்கு நினைவஞ்சலி செலுத்திருக்காங்க.. எல்லாரும் பல விதமா சொல்லியிருந்தாலும், அத்தனை பேரின் அஞ்சலியிலும் ஒரே ஒரு வாக்கியம் அட்சரப்பிசகாமல் ஒண்ணுபோல் வந்திருக்கு வாத்தியாரே..
அது, “எனக்குள் படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பின் அதனை அதிகப்படுத்தி, புத்தகங்களின் மீதான தாக்கத்தையும் ஏற்படுத்தி, பின் அதுபோல எழுதத் தூண்டியது சுஜாதாவின் எழுத்துக்கள்” என்பதுதான்..
இதுதான் வாத்தியாரே நீ..!
மேலுலகம் உன்னால் இப்போதும், எப்போதும் பெருமைப்படட்டும்..!
போயிட்டு வா வாத்தியாரே..!
நன்றி : திரு.அண்ணாகண்ணன் (படம் உதவி)
https://truetamilans.wordpress.com/2008/03/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/
Comments
Post a Comment