இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை.
பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை.
ஒரு ஜப்பானிய கதை சொல்வோமா?
இது குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்து கதை.
கடலில் மிக நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வந்தால் அங்கே பிடித்தமான மீன் வகைகள் நிறைய இருக்கும் என்று அவர்கள் அறிந்து கொண்டனர்.
பல மணி நேரம் படகில் பயணித்து நடுக்கடல் சென்று மிக அதிக அளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர்.
பல நாட்கள் தங்கியிருந்து அதிகமான மீன்களை பிடித்து கொண்டு கரைக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது
பல மீன்கள் இறந்து இருந்தன .
உலர்ந்திருந்தன.
நாற்றம் பிடித்தன.
எனவே படகில் செயற்கை நீர் தேக்கம் உண்டாக்கி பிடிபட்ட மீன்களை அதில் இட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த முறையில் சிறிய வெற்றி கிடைத்திருந்தது.
மீன்கள் சாகவில்லை.
எனினும் முழு வெற்றி இல்லை.
கரைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் சோர்ந்திருந்தன.
எனவே வழக்கமான சுவை இல்லை.
இதனால் விற்பனையிலும் தேக்க நிலை.
எல்லையற்ற கடல் நீரில் நீந்தி களித்திருந்த மீன்களுக்கு, நான்கு பக்கமும் எல்லை உள்ள சிறிய நீர்த்தொட்டியில் உயிர் வாழ்வது மிகப்பெரிய அலுப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில், அவர்களில் ஒரு புத்திசாலி மீனவன் ஒரு வழியை கண்டுபிடித்தான்.
மீன்கள் அடைபட்டிருந்த நீர் தேக்கத்தில் ஒரு குட்டி சுறாவையும் இட்டு வைத்தான்.
அப்புறம் என்ன? சுறா மீனிடமிருந்து உயிர்பிழைக்க மற்ற மீன்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தன.
பிழைப்பு என்பது அதன் வாழ்வின் அர்த்தம் ஆனது
எப்போதும் அலெர்ட்டாக இருந்ததால் கரைக்கு கொண்டு வரும் வரை அதன் சுவையும் குறைய வில்லை.
நம் வாழ்வும் அப்படித்தான்.
பிரச்னை தான் வலிமை. பிரச்னை தான் உயிர்.
நமக்கு விருப்பமானது எல்லாம் நம் படுக்கைக்கு அருகில் வந்தால் நாம் சீக்கிரமே இறந்து விடுவோம். நம் ரத்த ஓட்டம் நின்று விடும்.
நம் உடலில் பல உறுப்புகள் இயங்காமல் செயல் இழந்துவிடும்
நடந்து பழக்கப்பட்டவனுக்கு ஒரு நாய் துரத்தினால் தான் எப்படி ஓடுவான் என்று தெரியும்.
புலி துரத்தினால்?
அந்த ஓட்டத்தில் முள் குத்தினால் கவலைப்படுவோமா ? ஆணி குத்தினால் ஓட்டத்தை நிறுத்துவோமா
புலி துரத்தும்போது எதிரே ஒரு சுவர் இருந்தால்?
அப்படி ஒரு சுவரில் ஏணி இல்லாமல் ஏறவே முடியாது என்று முன்தினம் வரை நம்பிய நாம், அன்று புலி துரத்தும்போது எந்த கருவியும் இன்றி ஏறி இருப்போம்.
சின்ன பிரச்னை சின்ன நாய். பெரிய பிரச்னை புலி.
அவை துரத்தும்போது தான் நாம் பலம் பெறுவோம்.
பசி என்ற பிரச்னை வந்தபோது தான் முதல் மனிதன் ஆப்பிளை கடித்தான்
மிருகங்கள் தன்னை தாக்க வரும்போது தான் வேட்டைக்கான கருவிகளை உண்டாக்கினான்
வெயில் மழை என்ற பிரச்னைகளுக்கு தான் வீடு ஒன்றை மனிதன் உண்டாக்கினான்
அடங்கி ஒடுங்கி வீட்டில் இருங்கள் என்று அரசு நமக்கு உத்தரவிட்டபோது எப்படா வெளியே வருவோம் என்று தான் காத்திருந்தோம்.
வெளியே அவ்ளோ பிரச்னை என்று தினம் தினம் போராடிக்கொண்டிருந்த நமக்கு வீட்டில் இருப்பது அதை விட பெரிய பிரச்னை என்பது பிறகு தான் தெரிந்தது.
எனவே,
நம்மால் முடிந்தவரை முயற்சிப்போம்.
மீறி வந்தால்,
வரது வரட்டும் ஊதி தள்ளிடலாம் என்பதே நம் மன அமைப்பாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment