உலகின் மிக வலிமையான ஆயுதம் எதுவோ அது தன்னிடம் இருக்க
வேண்டும் என்பது அந்த அரசனின் ஆசை. "அகிலம் எங்கும் போங்கள், அதைக் கொண்டு
வாருங்கள்' என ஆணையிட்டான். தளபதிகளும், அமைச்சர்களும் ஒன்று கூடி உரையாடி,
அந்த ஆயுதம் எது என்று தீர்மானிக்க முற்பட்டனர்.
வாள், வேல், வில்,
கணை, கதை, குத்துவாள், கோடரி என்று படைவீரர்கள் பட்டியலிட்டனர். கூர்மையான
சொல், கொடு வாளைவிட வலிமையானது, காலாட்படையை பெருக்குவதைவிட, கவிஞர்
படையைப் பெருக்குவது நாட்டிற்கு நல்லது என இலக்கியச் சங்கங்கள்
தீர்மானங்கள் இயற்றின. எதிரியின் பலவீனம் எதுவோ, அதுவே நமது வலிமையான
ஆயுதம் என்பது அமைச்சர்களின் அபிப்பிராயம். மனையாளின் கண்ணீரா, குழந்தையின்
புன்னகையா என வீடுகளுக்குள் விவாதங்கள் நடந்தன.
விவாதம் வேறு வேறு
திசைகளில் திரும்புவதைக் கண்டு வெறுப்பும், எரிச்சலும் அடைந்தான் அரசன்.
இவர்களை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அரசன், ஊரின்
ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்து வந்த சாமியாரைச் சந்திக்கப் புறப்பட்டான்.
அவர் அவனது ஆன்மிகக் குரு. அரசியலிலும் அவ்வப்போது ஆலோசனைகள் சொல்வது
உண்டு. சாமியார்களுக்கு ஆயுதங்களைப் பற்றி என்ன தெரியும் என்று தளபதிகள்
தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
வேந்தனை வரவேற்றார் துறவி.
விஷயம் என்ன என்று விசாரித்தார். அரசன் ஆயுதம் பற்றிச் சொன்னான். என்னிடமே
இருக்கிறதே என்றார் சாமி. எங்கே? எங்கே? என்று பறந்தான் அரசன். இரு, இரு,
எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனார். ஒரு குவளையில் நீர் எடுத்து
வந்தார். இதுதான் என்றார். மன்னனுக்கு சினம் பொங்கியது. மரியாதை காரணமாக
மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு "இதுவா?' என்று திகைப்பைக்
கேள்வியாக்கினான்.
தண்ணீரைப் போல உலகில் வலிமையான ஆயுதம் வேறெதுவும்
இல்லை. பெரிய மலைகளைக்கூட அது உடைத்தெறிந்து விடும் என்ற துறவி கூடவே,
தண்ணீரைப் போல் மென்மையானதும் ஏதுமில்லை. ஒரு சிறு குழந்தைகூட அதைக் கையில்
ஏந்திவிடலாம் என்றார். அரசன் குழப்பமடைந்தான்.
துறவி சொன்னார்:
"ஆயுதத்தின் வலிமை அதன் வடிவத்தில் இல்லை. அதை இயக்குபவரின் மனதில்
இருக்கிறது. அதன் பின்னுள்ள நோக்கத்தின் வலிமையில் உள்ளது. பயிற்சி பெற்ற
படைவீரன்கூட மன உறுதியில்லாவிட்டால் சொதப்பி விடக் கூடும். மன உறுதி
இருந்தால் சின்னக் குழந்தைகூட வென்றுவிட முடியும்... எனவே மக்களைத் தயார்
செய்,' என்றார்.
தண்ணீரைப் போன்று வலிமையானது வேறொன்று இல்லை என்பதைத்
தமிழக மக்கள் கடந்த சில வாரங்களில் அனுபவப் பூர்வமாக அறிந்து
கொண்டிருப்பார்கள். ஆனால், அதை எப்படி நிர்வகிப்பது என்பதை இப்போதாவது
அரசோ, மக்களோ கற்றுக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
ஆனால்,
பழந்தமிழர் வல்லமை கொண்டிருந்த துறைகளில் ஒன்று நீர் மேலாண்மை என்பதற்கு
இலக்கியங்கள் ஏராளமான சாட்சியங்களைத் தருகின்றன. ஏரியை எப்படி அமைக்க
வேண்டும் என்பதற்கான குறிப்பு ஒன்று சங்ககாலப் புலவர் கபிலரின் பாடல்
ஒன்றில் ஒளிந்திருக்கிறது.
எட்டாம் நாள் நிலவைப் போல, அதாவது எட்டாம்
பிறையைப் போல ஏரி அமைந்திருக்க வேண்டும் என்கிறார் கபிலர் (எண்நாள் திங்கள்
அனைய கொடுங்கரை) எட்டாம் பிறை நிலவு எப்படி இருக்கும்? ஏதாவது ஓர் அஷ்டமி
நாளில், டி.வி.யைச் சில நிமிடம் நிறுத்தி விட்டு வாசலில் வந்து வானத்தைச்
சில நிமிடம் பாருங்கள். ஆங்கில எழுத்து சி போல அரை வட்ட வடிவில் இருக்கும்.
இந்த எட்டாம் பிறை நிலவு, பல கவிஞர்களைப்
பாடாய்ப்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் அழகை, உடலின் 19 பகுதிகளையும்
உவமைகள் கொண்டு உணர்த்த முற்படும் பொருநராற்றுப்படைப் பாடல் ஒன்று, எட்டாம்
பிறை போன்ற நெற்றி என்கிறது. அது மட்டுமல்ல, ஆற்று மணல் போன்ற கூந்தல்,
மழை போன்ற கண்கள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ் என்று வர்ணித்துக் கொண்டு
போகும்போது, நீருக்கு நெருக்கமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்
என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆங்கில மரபில் எட்டாம் நாள் நிலவு
பீனிக்ஸ் பறவையின் குறியீடு.
ஏரியின் வடிவத்தை வரையறுப்பதில்
மட்டுமல்ல, அதன் கரைகளை எத்தகைய மண் கொண்டு அமைக்க வேண்டும் என்றும் சங்கப்
பாடல்களில் செய்திகள் உள்ளன. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணோடு,
வேறு சில பொருள்களைச் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படும் அரைமண்
நீர்க்கசிவைத் தடுக்கும் வலிமை கொண்டதாக, இறுக்கமானதாக இருந்திருக்கிறது.
இறுக்கமான
மண் கொண்டு ஏரியை அமைத்து விடுவதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அதற்கான
மதகுகளை அமைப்பது என்பது நீர் மேலாண்மையின் முக்கிய அம்சம். பழங்கால
ஏரிகளில் மேட்டு மடை, பள்ள மடை என்று பாசனம் பெறும் பகுதியைக் கருத்தில்
கொண்டு மடைகள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
வெளியேறும் நீரின்
அளவைக் கணக்கிடும் வழிமுறைகள், சூத்திரங்கள் இருந்திருக்கின்றன. நீர்வழிச்
சூத்திரம் என்றே ஒரு பாடல் இருக்கிறது. நான்கு நாழிகை நீர் பாயும் மதகு,
ஆறு நாழிகை நீர் பாயும் மதகு, 12 நாழிகை நீர் பாயும் மதகு என்று பல்வேறு
வகையான மதகுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆறுகளில் நீர் பெருகி ஓடும்
காலங்களில், அந்த நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுக்கவும், அந்த உபரி
நீரைச் சேமிக்கவும் பல்வேறு விதமான நீர் நிலைகள் உருவாக்கப்பட்டு ஒன்றோடு
ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. ஆற்றில் நீரின் அளவு
அதிகரிக்கும்போது, அது ஆற்றிலிருந்து ஏரிக்கு வரும். ஏரியிலிருந்து
கண்மாய். கண்மாயிலிருந்து கரணை. கரணையிலிருந்து தாங்கல். தாங்கலில் இருந்து
ஏந்தல். ஏந்தலில் இருந்து ஊரணி. ஊரணியிலிருந்து குளம். குளத்திலிருந்து
குட்டை என ஒரு நீர்ச் சங்கிலி அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.
குழாயில்
குறிப்பிட்ட நேரம் மட்டும் தண்ணீர் வரும் வீடுகளில் முன்னர், ஜோடுதவலை,
அண்டா, தவலை, குடம், வாளி, பாத்திரம் என வெவ்வேறு அளவுள்ள கலன்களில் நீரை
சேமித்துக் கொள்வார்களே அதைப் போன்ற "காமன் சென்ஸ்' இது.
இதுபோன்ற ஒரு
நீர்ச் சங்கிலியை அமைத்துக் கொண்டதால், அன்று ஏரி கண்மாய்களைக் கொண்டே பழைய
தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்) காவிரி டெல்டா
மாவட்டங்களுக்கு நிகராக நெல் விளைவித்து, சோறுடைத்து என்று பெயர் பெற்று
விளங்கியிருக்கிறது.
இன்று ஆறுகளிலிருந்து ஏரிக்கு நீர் செல்வதில்லை.
ஏரிகள் நிரம்பும்போது ஆற்றுக்குள் திறந்து விடப்பட்டு ஊருக்குள் தண்ணீர்
வருகிறது. கரணை, தாங்கல், ஊரணி என்ற சொற்கள் எல்லாம் நமக்குப்
பழக்கமானவைதான். ஆனால், அவை வீடுகள் கொண்ட நகர்ப் பகுதிகளாக (உதாரணம்:
பள்ளிக் கரணை, ஈக்காடு தாங்கல், செக்கானுரணி) மாறிவிட்டன.
நீர் வற்றும்
காலங்களில் நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ள ஏற்பாடுகள்
வியப்பளிக்கின்றன. காஞ்சிபுரம் அருகில் உள்ள அய்யங்கார் குளம் (பரப்பளவு
133 ஏக்கர்) என்ற குளத்தின் நடுவில் இன்னொரு ஆழமான சிறிய குளம் இருக்கிறது.
அதில் உள்ள நீரை, மதகுகள் மூலம் வெளியேற்ற முடியாது. தண்ணீர்ப்
பஞ்சம் ஏற்படும் காலங்களில் கால்நடைகள் நா வறண்டு இறந்து விடாமல்,
அவற்றிற்கு தண்ணீர் கிடைக்குமாறு செய்ய இப்படி ஓர் ஏற்பாடு. என்ன ஒரு முன்
யோசனை? (பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் குளத்தின் கரைகளில் அழகான
சிறு சிற்பங்களைக் காணலாம்).
காகிதம் கண்ட இடமெல்லாம் கிறுக்குவதைப்போல
அன்று கல்கண்ட இடமெல்லாம் செதுக்கினார்கள் என்று எண்ணுவது ஒரு பார்வை.
ஆனால், குளமானாலும், கோவிலானாலும் அவை நிரந்தரத்துவத்தின் ஓர் அம்சமாகக்
கருதப்பட்டன என்பதைத்தான் இந்தச் சிற்பங்கள் நமக்குச் சொல்கின்றன.
அண்மையில், சென்னைக்குள் வந்த வெள்ளம், நவீன சென்னையின் பகுதிகளான கோட்டூர்புரம், பழைய மகாபலிபுரம்
அருகே உள்ள குடியிருப்புகள், முடிச்சூர், மடிப்பாக்கம் ஆகியவற்றைப் பதம்
பார்த்து விட்டது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் புற நகர்களாக விளங்கிய பழைய
சென்னையான மயிலை, திருவல்லிக்கேணி, சாந்தோம் போன்ற பகுதிகளை அந்த அளவு
பாதிக்கவில்லை.
இதைக் கண்ட ஒருவர் நட்பு ஊடகத்தில் (social media)
"என்ன இருந்தாலும், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்' என்று
எழுதியிருந்தார். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. பழந் தமிழர்களின் நீர்
மேலாண்மையைப் பற்றி அறிந்த எவருக்கும் பற்றிக் கொண்டுதான் வரும். அறிவியல்,
ஆங்கிலேயருக்கு மட்டுமே சொந்தமானதல்ல!
சத்தியமூர்த்தி மேயராக இருந்த
காலத்தில் (1939) உருவாக்கப்பட்ட பூண்டி நீர்த் தேக்கத்திற்குப் பிறகு
சென்னைக்கு அருகில் பெரிய நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே
இருந்த நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், அலட்சியத்தால்
புறக்கணிக்கப்பட்டுமே உள்ளன,
அண்மையில், சென்னை எதிர் கொண்ட பெரு
வெள்ளத்தைக் கவனத்தில் கொண்டு, புதியதொரு ஏரியைச் சென்னைக்கு அருகில் உகந்த
இடத்தில் அமைப்பதைப் பற்றியும், நீர் நிலைகளுக்கு இடையே இணைப்பை
ஏற்படுத்தும் நீர்ச் சங்கிலி குறித்தும் அரசு யோசிக்க வேண்டும்.
அப்படித்
திட்டமிடும்போது, பழந்தமிழரின் நீர் மேலாண்மைக் கருத்துக்கள் குறித்து
ஆராய்ந்து பொருத்தமானவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும். தமிழ் என்பது
வெறும் மொழியல்ல, அதற்கு ஓர் அறிவார்ந்த மரபும் உண்டு.
தண்ணீரைப் போன்று வலிமையானது வேறொன்று இல்லை என்பதைத் தமிழக மக்கள் கடந்த சில வாரங்களில் அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அதை எப்படி நிர்வகிப்பது என்பதை இப்போதாவது அரசோ, மக்களோ கற்றுக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.
https://www.dinamani.com/editorial-articles/2015/dec/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...-1244355.html
Comments
Post a Comment